“சரியான பொறுப்புகளில் நேர்மையானவர்கள்”: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தல்

சரியான பொறுப்புக்களில் நேர்மையான நபர்களை நியமிக்கும் போதே தவறுகள் தவிர்க்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். 2016 குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி, மதுரையைச்…

சரியான பொறுப்புக்களில் நேர்மையான நபர்களை நியமிக்கும் போதே தவறுகள் தவிர்க்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

2016 குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி, மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முகமது ரஸ்வி தாக்கல் செய்த வழக்கு, நீதிபதிகள் புஷ்பா சத்திய நாராயணா, வேல்முருகன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

தேர்தல்களின்போது ஒரு வாக்குச்சாவடியில் முறைகேடு நடந்ததாக பிரச்சனை எழுந்தால் தேர்தல் ரத்து செய்யப்படுவதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், தேர்வு மையங்களில் முறைகேடு நிகழ்ந்தது உறுதி செய்யப்பட்டும் தேர்வு ரத்து செய்யப்படாதது ஏன்? எனவும் கேள்வி எழுப்பினர்.

ஏடிஎம் மையங்களுக்கு பணத்தை நிரப்ப எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்கப்படுகையில், பல லட்சம் மாணவர்களின் எதிர்காலம் தொடர்பான விடைத் தாள்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்காதது ஏன்? எனவும் அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினர்.

முறைகேடு செய்த தமிழகத்தின் வெவ்வேறு பகுதியினர் சரியாக 2 தேர்வு மையங்களை தேர்வு செய்தது எப்படி என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், குரூப் 4 தேர்வு முறைகேடு மிகப்பெரும் மோசடி, இதற்கான விசாரணையை வேரிலிருந்து தொடங்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். டிஎன்பிஎஸ்சி மீது மக்கள் இழந்த நம்பிக்கையை கொண்டு வர வேண்டும் எனக்கூறிய நீதிபதிகள், சரியான பொறுப்புக்களில் நேர்மையான நபர்களை நியமிக்கும் போதே தவறுகள் தவிர்க்கப்படும் எனக்கூறி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.