மக்களுக்கு உதவாமல் பாஜகவினர் அரசியல் செய்கின்றனர்: கனிமொழி

மழை காலத்தில் மக்களுக்கு உதவி செய்யாமல், பாஜகவினர் அரசியல் செய்வது தவறு என மக்களவை உறுப்பினர் கனிமொழி விமர்சனம் செய்துள்ளார். சென்னை தி.நகர் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு, தனியார் தொண்டு நிறுவனம்…

மழை காலத்தில் மக்களுக்கு உதவி செய்யாமல், பாஜகவினர் அரசியல் செய்வது தவறு என மக்களவை உறுப்பினர் கனிமொழி விமர்சனம் செய்துள்ளார்.

சென்னை தி.நகர் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு, தனியார் தொண்டு நிறுவனம் சார்பாக உணவு மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதனை தொடங்கி வைத்த மக்களவை உறுப்பினர் கனிமொழி, பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

கடந்த அதிமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக முதலமைச்சர் பேசியதை சுட்டிக்காட்டிய அவர், தனது மக்களவை தொகுதியான தூத்துக்குடியிலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு குழப்பங்கள் நிலவுவதாக கூறினார். மழை நீர் தேங்குவதை தடுக்க முழுமையான திட்டம் வேண்டும் எனவும் அதனை முதலமைச்சர் செய்வார் எனவும் நம்பிக்கை தெரிவித்த கனிமொழி, பாஜகவினரின் நேற்றைய ஆய்வு குறித்தும் கருத்து தெரிவித்தார்.

மழைக் காலத்தில் பாதித்த மக்களுக்கு உதவி செய்யாமல், பாஜகவினர் அரசியல் செய்வது தவறு எனக்கூறிய கனிமொழி, கடந்த வெள்ளத்தின் போது திமுக மக்களுக்கு உதவிதான் செய்தது, அரசை குறை சொல்லவில்லை. மழை முடிந்தபிறகே அதன் காரணம் குறித்து ஆராய வேண்டும். மக்கள் கஷ்டப்படும்போது அரசியல் செய்வது நாகரீகம் அற்ற செயல் எனவும் சாடினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.