தென்மாவட்டங்களில் தொடரும் கனமழை – பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

தென்மாவட்ட மழை வெள்ள பாதிப்புகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்  பிரதமர்  நரேந்திர மோடி நேரில் சந்தித்து ஆலோசனை நடத்த  நேரம் கோரி கடிதம் எழுதியுள்ளார். குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல…

தென்மாவட்ட மழை வெள்ள பாதிப்புகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்  பிரதமர்  நரேந்திர மோடி நேரில் சந்தித்து ஆலோசனை நடத்த  நேரம் கோரி கடிதம் எழுதியுள்ளார்.

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.  இதனால் திருநெல்வேலி,  தூத்துக்குடி,  தென்காசி,  கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

மழைநீர் தேக்கம் மற்றும் அதி கனமழை காரணமாக நெல்லையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.  பல்வேறு பகுதிகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.  நெல்லையில் இருந்து செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.  மற்ற தென் மாவட்டங்களும் கனமழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், நெல்லை,  தென்காசி,  தூத்துக்குடி,  கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.  இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆட்சியர்களுடன்,  தென்மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்கள், ஆணையர்கள், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளின் நிலை குறித்தும்,  மீட்புப் பணிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆட்சியர்கள்,  அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்ததார்.

இதனைத் தொடர்ந்து தென் மாவட்ட மழை வெள்ள பாதிப்புகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்  பிரதமர்  நரேந்திர மோடி நேரில் சந்தித்து ஆலோசனை நடத்த  நேரம் கோரியுள்ளார்.

இது தொடர்பாக செய்தி மக்கள் தொடர்பு துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது..

“ சென்னை,  செங்கல்பட்டு,  காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அண்மையில் பெய்த மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு விரைந்து நிதி ஒதுக்க கோரவும்,  தற்போது தென் மாவட்டங்களில் பெய்து வரும் அதி கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள்,  மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து எடுத்துக் கூறி ஆலோசிக்கவும்,  நாளை (19.12.2023) புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  நேரம் கோரி கடிதம் எழுதியுள்ளார்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.