முறையான வசதிகள் இன்றி ஹாக்கி விளையாட்டில் ஆர்வம் கொண்டு விளையாடி வரும் அரசு பள்ளி மாணவர்களுக்கு, கோடைகால பயிற்சி மூலம் பயிற்சியளித்து பரிசுகளையும் வென்று கொடுத்துள்ளார் அரசு பள்ளியில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர். இது குறித்த செய்தித் தொகுப்பை தற்போது பார்க்கலாம்…
உலகெங்கிலும் உள்ள விளையாட்டு நகரங்களில், ஒடிசா மாநிலத்தின் பெயர் ஒலிக்க காரணம், இரண்டு முறை உலகக் கோப்பை ஆடவர் ஹாக்கி தொடர் இங்கு நடைபெற்றதால் தான் என்பதை நம் எவராலும் மறுக்க முடியாது. ஹாக்கி விளையாட்டில் சிறுவர் முதல் பெரியவர் வரை ஒவ்வொருவரையும் மெருகேற்றி, இந்திய அணிக்காக விளையாட வைக்கும் பயிற்சி பட்டறையாக செயல்பட்டு வருகிறது ஒடிசா.
அதே போல தமிழ்நாட்டிற்கும் ஹாக்கி விளையாட்டிற்குமான பிணைப்பு கிட்டத்தட்ட 100 வருடங்கள் பாரம்பரியமிக்கதாகும். ஹாக்கி விளையாட்டின் மீதான ஆர்வத்தை தமிழக இளைஞர்கள் மத்தியில் புகட்டுவதற்காகவே, நடப்பு ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய கோப்பை புரோ ஹாக்கி தொடர் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் நடைபெறவுள்ளது.
ஹாக்கி விளையாட்டிற்காகவே பிரத்யேக பயிற்சிகள் வழங்கும் வசதிகளை அரசும், தனியார் நிறுவனங்களும் ஒரு புறம் ஏற்பாடு செய்து கொடுத்துவந்தாலும், இன்னுமே முறையான பயிற்சி மேற்கொள்ள வழி இல்லாத நிலை தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் தொடர்கிறது.
அதே நிலை சென்னை மணலியை அடுத்துள்ள, சின்ன சேக்காடு பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு நிலவி வருவதை அடுத்து, அந்த மாணவர்களுக்கு, அந்த பள்ளியில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர் லூயிஸ் என்பவர் தொடர்ந்து பயிற்சி அளித்து ஊக்குவித்து வருகிறார். மாணவர்காளின் திறனை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு பயிற்சி மட்டுமல்லாது, பல்வேறு இடஙளில் நடைபெறும் போட்டிகளுக்கு அழைத்துச் சென்று கள நிலவரங்களையும், ஆட்ட சூழல்கள் குறித்தும் விளக்கி வருகிறார்.
லூயிஸின் கீழ் பயிற்சி பெற்ற மாணவர்கள் வேலூர் மற்றும் பாண்டிச்சேரி உள்ளிட்ட
இடங்களில் நடைபெற்ற ஹாக்கி லீக் போட்டிகளில் கலந்து கொண்டு ஏராளமான பரிசுகளையும் வென்று வருகிறார்கள். பள்ளி காலங்களில் மட்டுமே பயிற்சி என்பதில்லாமல், பள்ளிகள் விடுமுறை காலத்தின் போதும், பள்ளியிலேயே கோடைகால பயிற்சி முகாமும் நடத்தி வருகிறார்.
இந்த கோடைகால பயிற்சி முகாமில் அந்த பள்ளியில் பயிலும் மாணவர்கள் மட்டுமல்லது, அப்பகுதியில் பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையில் உள்ள ஏழை மாணவ மாணவிகளும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர்.
ஹாக்கி விளையாடுவதால் காயம் ஏற்படும் ஏழை மாணவர்கள் முன்னேற முடியாது என்ற நிலையை போக்கும் வகையில் ஹாக்கி விளையாடுவதால் செலவு அதிகமாகும் என்பதை கருத்தில் கொண்டு தேவையான உபகரணங்களை, தொண்டு நிறுவனங்கள் மூலம் பெற்று, மாணவர்களுக்கு அவர்களது உடல் வலிமை, மன வலிமையை உயர்த்தும் விதமாக இது போன்ற விளையாட்டு பயிற்சிகளை அளிப்பதாகவும், இதற்கு உறுதுணையாக இருக்கும் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் உதவிக்கரம் மீட்டுபவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் தொடர்ந்து ஆதரவளித்து வரும் நியூஸ் 7 தமிழுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் ஆசிரியர் தெரிவித்தார்.
அரசு பள்ளியில் பயின்று இங்கு பயிற்சி பெற்ற மாணவர் ஒருவருக்கு தற்போது
கல்லூரியில் 3000 ரூபாய் கட்டணத்தில் தனியார் கல்லூரியில் இடம் கிடைத்து
உள்ளதாகவும் விளையாட்டுத்துறையில் சிறுவர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டால் அவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை கிடைக்கும் என்ற நிலை தற்போது மாணவன் பெற்றுள்ளதாகவும் மேலும் விளையாட்டு சிறந்து வீரராக வலம் வர பயிற்சி மேற்கொண்டு தாம் படிக்கும் கல்லூரிக்கு பெருமை சேர்க்க உள்ளதாகவும் இந்தியாவின் மிகச் சிறந்த வீரராக வருவதற்கு முயற்சி செய்வதாக மாணவன் தினேஷ் தெரிவித்தார்.
பயிற்சி பெற நல்ல மைதானமும், முறையான பயிற்சியாளர்கள் மட்டுமே ஹாக்கி விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்களுக்கு வேண்டும் என்பது இல்லாமல், இருக்கும் வசதிகளை மட்டுமே பயன்படுத்தி, அடுத்தக்கட்ட நகர்வுகளுக்கான ஊக்குவிப்பாக பயிற்சிகள் வழங்கிவரும் ஆசிரியர் லூயிஸ் போன்றவர்கள் மற்ற அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாக இருப்பர் என்பதில் எவ்வித ஆட்சயபனையும் இல்லை….
திருவொற்றியூரில் இருந்து உமாபதி.. நியூஸ் 7 தமிழ் ஸ்பொர்ட்ஸ்












