உத்தரப்பிரதேசத்தில் 2000 ரூபாய் நோட்டை வாங்க மறுத்த பெட்ரோல் பங்க் ஊழியர் இருசக்கர வாகனத்தில் நிரப்பிய பெட்ரோலை மீண்டும் உறிஞ்சி எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2016-ம் ஆண்டு நவம்பரில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டன. இதனால் ரூபாய் நோட்டு புழக்கத்திற்கான தேவையை கருத்தில்கொண்டு 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டதன் நோக்கம் நிறைவேறியதாலும், போதுமான அளவுக்கு மற்ற ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்ததால் 2018 – 19ம் ஆண்டில் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டது நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், ரூ.2,000 நோட்டுகளைப் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி கடந்த வாரம் அறிவித்தது. அத்தகைய நோட்டுகள் செப்டம்பா் 30-ம் தேதி வரை செல்லுபடியாகும் என்றும், அதுவரை அவற்றை வழக்கமான பணப் பரிவா்த்தனையில் தொடா்ந்து பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் வங்கிகளுக்கு சென்று 2,000 ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதை விட, பெட்ரோல் பங்க் போன்ற இடங்களில் பயன்படுத்தி கொள்வது நேரத்தை மிச்சப்படுத்தும் என்பது பலரின் எண்ணமாக உள்ளது. இதே எண்ணத்தில் பலரும் உள்ளதால், பெட்ரோல் பங்க்குகளில் தற்போது சில்லறைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், உத்தரப்பிரதேசம் ஜல்காவூன் மாவட்டத்தில் உள்ள பெட்ரோல் பங்கில், வாடிக்கையாளர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பியுள்ளார். அதற்கு, 2000 ரூபாய் நோட்டை அவர் கொடுத்துள்ளார். ஆனால் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் 2000 ரூபாய் நோட்டை வாங்க மறுத்துள்ளனர். வாடிக்கையாளரும் தன்னிடம் வேறு பணம் இல்லை என்று கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து வாகனத்தில் நிரப்பிய பெட்ரோலை ஊழியர்கள் குழாய் மூலம் வெளியே எடுத்துள்ளனர். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
இந்த சம்பவம் குறித்து பெட்ரோல் பம்ப் மேலாளரான ராஜீவ் கிர்ஹோத்ரா, ரிசர்வ் வங்கியின் உத்தரவுக்குப் பிறகு நிறைய 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வந்துள்ளதாகவும், பெரும்பாலான சுமை பெட்ரோல் பம்புகள் மீது திணிக்கப்படுவதாக கூறினார். மேலும் முன்பு தங்களுக்கு 2000 ரூபாய் நோட்டுகள் ஒரு நாளைக்கு 3 முதல் 4 மட்டுமே வந்து கொண்டிருந்ததாவும், தற்போது 70 ரூபாய் நோட்டுகளாக அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறினார். இதனால் சில்லரை கொடுப்பதில் ஏற்படும் சிக்கல்கள் குறித்தும் அவர் தெரிவித்தார்.







