திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ.631.48 கோடி மதிப்பில் கட்டப்பட்ட முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து வேளாண் கண்காட்சியை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசியவர்,
“உலகத்தை பசுமையாக்கிய ஒவ்வொருவருக்கும் உணவளிக்கும் விவசாயிகளால் சிந்தனையும் பசுமையாகிறது. உழவர்கள் பின்னால் தான் நாம் நிற்கிறோம் என்பதை காட்டும் வகையில் வேளாண் கண்காட்சி உள்ளது. விவசாயம், விவசாயிகளுக்கான திட்டங்களில் தமிழ்நாடு முன்னோடியாக உள்ளது. விவசாயிகளின் கைகளுக்கு தொழில்நுட்பங்கள் கிடைத்தால்தான் அது உண்மையான வளர்ச்சி. அறிவியலும் தொழில்நுட்பமும் வளர்ந்துள்ளது, அந்த வளர்ச்சி வேளாண் துறைக்கும் வந்து சேர வேண்டும்.
புதிய பயிர் ரகங்கள், புதிய கண்டுபிடிப்புகள், வேளாண் கருவிகள் போன்றவை பற்றி விவசாயிகள் தெரிந்து கொள்ள வேண்டும். 13 தலைப்புகளில் வேளாண், விஞ்ஞானிகளுக்கான கலந்துரையாடல்களுக்கு ஏற்பாடு செய்துள்ளோம். நம் ஆட்சிக்கு சாட்சிதான் இந்த கண்காட்சி. இதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
விவசாயி வேடத்தை போட்டுக்கொண்டு விவசாயிகளின் போராட்டங்களை கொச்சைப்படுத்தவும் செய்வார்கள்.
திமுக ஆட்சியில் வேளாண் துறைக்கு 33 சதவீதம் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் 5 ஆண்டுகளாக மேட்டூர் அணை முறையாக உரிய நேரத்தில் திறக்கப்பட்டுள்ளது. மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 20 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,600 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இந்தாண்டு கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு விரைவில் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முந்தைய ஆட்சியாளர்கள் கைவிட்ட உழவர் சந்தை திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. திருவண்ணாமலையில் ரூ.3 கோடியில் சிறப்பு சேமிப்பு கிடங்கு அமைக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.







