மாநில அரசின் வளர்ச்சி திட்டங்களுக்கு ஆளுநர்கள் தடை ஏற்படுத்த நினைத்தால் தமிழிசை சந்தித்த அவலங்களைத்தான் சந்திக்க வேண்டி வரும் என திமுக நாளேடான முரசொலி தெரிவித்துள்ளது.
திமுக அரசின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியில் இன்று ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது. அதில், மாநில அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்கும், மக்கள் நலச் சட்டங்களுக்கும் ஆளுநர்கள் தடை ஏற்படுத்த நினைத்தால், தெலுங்கானாவில் ஆளுநர் தமிழிசை சந்தித்த அவலங்களைத்தான் சந்திக்க வேண்டிவரும் என தெரிவித்துள்ளது.
ஜனநாயக நாடுகளில் ஒரு மாநில அரசு என்பது அம்மாநிலத்தின் பெரும்பான்மையான மக்களின் ஆதரவைப் பெற்று ஆட்சி பீடம் ஏறி, அந்த மாநிலத்தின் பணியாற்றும் அதிகாரிகளோடு கலந்தாலோசிக்கும் என குறிப்பிட்டுள்ளது. அவ்வாறு அந்த மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும், மக்களின் நன்மைக்காகவும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவையின் ஒப்புதல் பெற்று இயற்றி அனுப்பிடும் சட்டங்களை, ஒன்றிய அரசின், ஆளுகின்ற கட்சியின் அரசியல் நியமனமாக விளங்கும் ஒற்றை நபர், அதுவும் அந்த மாநிலத்துக்கே தொடர்பற்ற ஒருவர் தடுத்து நிறுத்தி காலதாமதப்படுத்தி அதிலே அரசியல் செய்வதை எந்த அரசுதான் ஏற்கும்? என கேள்வி எழுப்பியுள்ளது.
இரண்டு அதிகார மையங்களின் மோதலில், மக்கள் துன்பப்படக் கூடாதே என்ற நல்லெண்ணத்தில் மாநில அரசு, விட்டுக் கொடுத்துப்போக நினைக்கலாம்.
ஆனால் மோதும் போக்கு அதிகமானால் அல்லது தொடர்ந்தால் ஆளுநர் தமிழிசைக்கு ஏற்பட்ட நிலை தங்களுக்கும் ஏற்படலாம் என்பதை தன்னிலை அறியாது பேசியும் செயல்பட்டுக் கொண்டும் இருக்கும் ஆளுநர்கள் உணர்ந்திட வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளது.
-இரா.நம்பிராஜன்








