பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை நாங்கள் எதிர்க்கவில்லை; ஆனால்… – மல்லிகார்ஜுன கார்கே..!

பெண்களுக்கான இட ஒதுக்கீட்டிற்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

சட்ட மற்றும் நாடாளுமன்றங்களில் பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தை 33 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக மத்திய அரசு, அரசியலமைப்பு சட்டம் 131-வது திருத்த மசோதா-2026, தொகுதிகள் மறுவரையறை மசோதா-2026 மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டங்கள் திருத்த மசோதா-2026 ஆகிய 3 மசோதாக்களை நாளை கூட உள்ள நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளன. பெண்களுக்கு 33 சதவீத இடங்கள் அளிப்பதற்கு வசதியாக இந்த மசோதா மூலம் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்தது. ஆனால் எதிர்கட்சிகளால் இந்த மசோதா கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக, டெல்லியில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர்.

கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது ;

“பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவிற்கு நாங்கள் அனைவரும் ஆதரவாக இருக்கிறோம். ஆனால், அவர்கள் அதைக் கொண்டு வரும் விதத்தில் தான் எங்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்காகவே மத்திய அரசு இதைச் செய்வதாக தெரிகிறது. அவர்கள் தொகுதி மறுவரையறை விஷயத்தில் சில தந்திரங்களைச் செய்கிறார்கள். நாங்கள் இந்த மசோதாவை எதிர்ப்போம், ஆனால் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டிற்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல” என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.