ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் இருப்பது, மக்கள் மீதான அக்கறையின்மையை காட்டுவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தலைமை அலுவலகத்தில், டிடிவி தினகரன் தலைமையில் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய டிடிவி தினகரன், மாநில அரசு இயற்றக்கூடிய சட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதுதான் ஆளுநரின் கடமை எனவும், ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பது மக்கள் மீது இருக்கும் அக்கறையின்மையை காட்டுவதாகவும் கூறினார்.
இதனையடுத்து எனஎல்சி நிலம் கையகப்படுத்தும் விவகாரம் தொடர்பாக தொடர்ந்து பேசிய அவர், நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திற்காக இடம் கையகப்படுத்தும் பணிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட தொடங்கி இருப்பதாகவும், தமிழக மக்கள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தினால் தான் தீர்வு கிடைக்கும் எனவும் அவர் பேசினார்.
மேலும் நாளை கடலூர் மாவட்ட நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்திய பிறகு என்.எல்.சி விவகாரத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து அறிவிக்கப்படும் எனவும் கூறிய டிடிவி தினகரன் , திமுக ஆட்சிக்கு முன்பும் பின்பும் இரட்டை வேடம் போடுவதாகவும் படித்த அரசியல்வாதியான பொன்முடியின் பேச்சுக்கள் வருத்தமளிப்பதாகவும் தெரிவித்தார்.
- பி.ஜேம்ஸ் லிசா









