பஞ்சாப் பட்ஜெட்: விவசாயத்திற்கு ரூ.13,000 கோடி, கல்விக்கு ரூ.17,000 கோடி – அதிரடி அறிவிப்புகள்

பஞ்சாப் நிதியமைச்சர் ஹர்பால் சிங் சீமா 2023-24 ஆம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டை சண்டிகரில் உள்ள சட்டசபையில் இன்று தாக்கல் செய்தார். கடந்த ஆண்டு பஞ்சாபில் முதன்முறையாக ஆட்சிக்கு வந்த ஆம் ஆத்மி கட்சி…

பஞ்சாப் நிதியமைச்சர் ஹர்பால் சிங் சீமா 2023-24 ஆம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டை சண்டிகரில் உள்ள சட்டசபையில் இன்று தாக்கல் செய்தார். கடந்த ஆண்டு பஞ்சாபில் முதன்முறையாக ஆட்சிக்கு வந்த ஆம் ஆத்மி கட்சி தாக்கல் செய்துள்ள முதல் முழு பட்ஜெட் இதுவாகும்.

பஞ்சாபில் ஆம் ஆத்மி அரசு தனது முதல் முழுமையான மாநில பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தது. முன்னதாக இது பொதுமக்களின் நலனுக்கான பட்ஜெட் ஆக இருக்கும் என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கூறியிருந்தார். குறிப்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் “கடந்த ஆண்டு, இந்த நாளில் தான் பஞ்சாப் மக்களின் ஆணைப்படி நாங்கள் ஆட்சிக்கு வந்தோம். இன்று அதே நாளில் எங்கள் அரசாங்கம் அதன் முதல் முழுமையான பட்ஜெட்டைத் தாக்கல் செய்யப் போகிறது, இது பஞ்சாபிற்கு முக்கியமான ‘வரலாற்று நாள்’ என்று கூறியிருந்தார்.

அதன்படி பட்ஜெட்டை மாநில நிதியமைச்சர் ஹர்பால் சிங் சீமா இன்று தாக்கல் செய்தார், இந்த பட்ஜெட்டில் அவர் கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவை அரசாங்கத்தின் கவனம் செலுத்தும் பகுதிகளில் முக்கியமான ஒன்று என கூறியதோடு, அதன் படி மாநிலத்தில் இதுவரை 10.50 லட்சம் பேர் ஆம் ஆத்மி கிளினிக்குகளில் சிகிச்சை பெற்றுள்ளனர் எனவும், பள்ளி கல்விக்காக மற்றும் உயர் கல்விக்காக ரூ.17,072 கோடி ஒதுக்கப்படுவதாகவும், இது முந்தைய ஆண்டை விட 12% அதிகம் என்றும் தெரிவித்தார்.

மேலும், விவசாயம் மற்றும் அதை சார்ந்த துறைகளுக்கு 20 சதவீதம் அதிகரித்து மொத்தம் ரூ.13,888 கோடி ஒதுக்கீடு, புதிய விவசாயக் கொள்கையை அரசு விரைவில் வெளியிட அதற்காக நிபுணர்கள் குழு ஒன்று அமைக்க ஏற்பாடு, விளையாட்டுக்காக கடந்த 2022-23
நிதியாண்டை விட 55% அதிகமாக ரூ 258 கோடி ஒதுக்கீடு, உடல்நலம் மற்றும் குடும்ப நலனுக்காக ரூ.4,781 கோடி பட்ஜெட் ஒதுக்கீடு (2022-23 ஆண்டை விட11% அதிகம்), சட்டம் ஒழுங்கை பராமரிப்பதற்காக, காவல்துறைக்கு ரூ10,523 கோடி ஒதுக்கீடு (2022-23 ஆண்டை விட11% அதிகம்), உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ரூ 26,295 கோடி ஒதுக்கீடு (2022-23 ஆண்டை விட13% அதிகம்) என அடுத்தடுத்த அறிவிப்புகளை ஹர்பால் சிங் சீமா சட்டசபையில் அறிவித்தார்.

இது தவிர இதுவரை 26,797 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், 23-24 நிதியாண்டுக்கான பஞ்சாபின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) 9.24 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.