தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்!- ஜெ.பி.நட்டா

தமிழகத்தில் வாரிசு அரசியல் நடக்கிறது. திமுகவிற்கு தமிழக மக்கள் மீது அக்கறை இல்லை. தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை பாஜகவால் மட்டுமே தர முடியும். ஆகவே தமிழகத்தில் பாஜக மலர்ந்தே தீரும் என அக் கட்சியின்…

தமிழகத்தில் வாரிசு அரசியல் நடக்கிறது. திமுகவிற்கு தமிழக மக்கள் மீது அக்கறை இல்லை. தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை பாஜகவால் மட்டுமே தர முடியும். ஆகவே தமிழகத்தில் பாஜக மலர்ந்தே தீரும் என அக் கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா கூறினார்.

கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், புதுக்கோட்டை, திருச்சி, விழுப்புரம், தேனி, திருவள்ளூர், விருதுநகர், தூத்துக்குடி ஆகிய 10 மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள பாஜக மாவட்ட தலைமை அலுவலகங்களை திறக்க அக் கட்சியின் தேசிய தலைவரான ஜெ.பி.நட்டா இன்று கிருஷ்ணகிரி வந்தார். அவரை மாநில தலைவர் அண்ணாமலை வரவேற்றார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாஜக மாவட்ட தலைமை அலுவலகத்தை பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா திறந்து வைத்தார். பின்னர் அவர் 75 அடி உயரமுள்ள கம்பத்தில் பாஜக கொடியை ஏற்றி வைத்தார். காணொலியில் தருமபுரி, நாமக்கல் உள்ளிட்ட மற்ற 9 மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள பாஜக அலுவலகங்களையும் அவர் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மகளிரணி தேசிய தலைவி வானதி சீனிவாசன் எம்எல்ஏ உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, இன்று வரலாற்று சிறப்பு மிக்க நாள். ஒரே நாளில் 10 மாவட்ட பாஜக அலுவலகங்கள் திறக்கப்பட்டு உள்ளன. 887 மாவட்டங்களில் நவீன பாஜக அலுவலக கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதில் 290 அலுவலகங்கள் கட்டப்பட்டு செயல்பட்டுக்கு வந்துள்ளது. இன்று திறக்கப்பட்ட அலுவலகம் 24 மணி நேரமும் திறந்து இருக்கும். இது அலுவலகம் இல்லை இது புண்ணியமான இடம் என்று கூறினார்.

மேலும் திரிபுரா, நாகாலாந்து மாநிலங்களில் பாஜக இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்து உள்ளது. கிறிஸ்துவர்கள் அதிகம் உள்ள பகுதியில் பாஜக ஆட்சி அமைத்து உள்ளது. நாகாலந்து, திரிபுரா, மேகாலயாவில் நாம் வெற்றி பெற காரணம் பிரதமரின் சிறந்த பணியாகும்.

தமிழகத்தில் நம்முடைய கடினமான உழைப்பால் விரைவில் தாமரை மலரும். 18 கோடிக்கு அதிகமான தொண்டர்களை கொண்ட வலிமையான கட்சி பாஜக. காங்கிரஸ் கட்சி பிரித்தாளும் சூழ்ச்சியை செய்து வருகிறது. மற்றொருபுறம் குடும்ப அரசியல் நடக்கிறது.

ஆனால் பிரதமர் மோடி வளர்ச்சியை மட்டுமே நோக்கமாக கொண்டு ஆட்சி செய்கிறார். மோடி பிரதமர் ஆன பின்பு உலக அளவில் 10-வது இடத்தில் இருந்த இந்திய பொருளாதாரம் 5-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. நம்மை ஆண்ட இங்கிலாந்து, பொருளாதாரத்தில் இப்போது 6-வது இடத்தில் உள்ளது. உலகத்திற்கு வழிகாட்டியாக உலக நாடுகளுக்கு வளர்ச்சியை கொடுக்கும் விதமாக பிரதமர் மோடி ஆட்சி செய்து வருகிறார்.

பாஜக ஆட்சிக்கு முன் 98% செல்போன்கள் இறக்குமதி செய்யப்பட்டன. ஆனால் தற்போது 97% செல்போன்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன. ஐபோன் வாங்கினால் மேக் இன் இந்தியா என்று இருக்கும். வெளி நாடுகளுக்கு அதிக அளவில் மருந்துகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

40 ஆண்டுகளாக ஆண்டவர்கள் தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை. ஆனால் பாஜக 9 ரயில்வே திட்டங்களை கொடுத்து உள்ளது. 40 ஆண்டு காலம் ஆண்டவர்கள் தமிழகத்திற்கு என்ன செய்தனர்? என கேள்வி எழுப்பினார்.தொடர்ந்து பேசிய அவர், ஜல் ஜீவன் திட்டத்தை துவங்கும் போது திருக்குறள் கூறி பிரதமர் தொடங்கி வைத்தார். தமிழகம் போன்று மற்ற மாநிலங்களில் திருக்குறளுக்கு மரியாதை அளிக்கப்படுகிறது. மே மாதம் பிரதமர் தமிழகம் வந்த போது 31 ஆயிரம் கோடிக்கு திட்டங்களை வழங்கி உள்ளார்.

காங்கிரஸின் மோசமான ஆட்சி காரணமாகவே மாநில கட்சிகள் தோன்றின. ஒவ்வொரு மாநிலத்திலும் குடும்ப கட்சிகளுக்கு எதிராக பாஜக போராடி வருகிறது. தமிழகத்திலும் வாரிசு அரசியல் நடக்கிறது. திமுகவிற்கு தமிழக மக்கள் மீது அக்கறை இல்லை. தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை பாஜகவால் மட்டுமே தர முடியும். ஆகவே தமிழகத்தில் பாஜக மலர்ந்தே தீரும் என அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.