’ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழக அரசியல் குறித்த புரிதல் இல்லை’ – அன்புமணி ராமதாஸ்

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழ்நாடு அரசியல் குறித்த புரிதல் இல்லை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பாரதிய இலக்கிய சங்கம் மற்றும் பாமக சார்பாக 4 நாட்கள் நடைபெறும்…

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழ்நாடு அரசியல் குறித்த புரிதல் இல்லை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பாரதிய இலக்கிய சங்கம் மற்றும் பாமக சார்பாக 4 நாட்கள் நடைபெறும் கிராமிய விழாவை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் துவக்கி வைத்தார். இந்த கிராமிய திருவிழாவில் குடிசை வீடுகள், இயற்கை விவசாய நிலம், பாரம்பரிய விளையாட்டு திடல், பாரம்பரிய விளையாட்டுக்களான உரி அடித்தல், இளவட்டக்கல் தூக்குதல் போன்ற விளையாட்டுகளும் இடம்பெற்றுள்ளன.

அனைத்தையும் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தற்போது உள்ள இளம் தலைமுறையினர் மத்தியில் கிராமம் என்ற பார்வையை நல்லவிதமாக மாற்றும் வகையில் கிராமிய விழா நடத்தப்படுகிறது. கிராமிய கலைகளை ஊக்குவிக்க தமிழகத்தில் உள்ள 12,600 பஞ்சாயத்துகளுக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். தெருகூத்து கலையை தற்போதுள்ள மாணவர்கள் மறந்து விட்டார்கள்.

இளம் தலைமுறையினர் மத்தியில் சமூக வலைத்தளங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் சூழலில் தமிழர்களின் பாரம்பரியத்தை அவர்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். சென்னையில் தமிழ்நாடு அரசு சார்பாக தமிழ்சங்கமம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதை அரசியலாக பார்க்க கூடாது. நமது பாரம்பரிய கலைஞர்களை ஊக்குவிக்க நான் இதை மிகப்பெரிய விழாவாக பார்க்கிறேன். இதை நான் வரவேற்கிறேன்.

மது இல்லாமல் இந்த தலைமுறையால் வாழ முடியாது என்ற நிலையை ஏற்படுத்தி உள்ளது திடாவிடக் கட்சிகள். திராவிட மாடல் என சொல்லும் ஆட்சியாளர்கள் மது வருமானம் இல்லாமல் ஆட்சி செய்ய முடியுமா?

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்ட மசோதாவிற்கு அனுமதி கொடுப்பதுதான் ஆளுநரின் வேலை. தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவில் ஆளுநர் தலையிடக் கூடாது. ஆன்லைன் சூதாட்ட தடை மசோதவிற்கு ஒப்புதல் அளிக்க தாமதம் செய்யும் ஆளுநர், ஆன்லைன் சூதாட்ட தடை விவகாரத்தில் கொள்கை முடிவை சொல்ல வேண்டும். ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்படும் உயிரிழப்பிற்கு ஆளுநர்தான் காரணம். ஆளுநருக்கு தமிழக அரசியல் குறித்த புரிதல் இல்லை. ஆளுநர் தமிழ்நாடு அரசின் நிர்வாகத்தை கண்காணிக்கலாம். ஆனால் அரசியலில் ஈடுபடக் கூடாது.

பாட்டாளி மக்கள் கட்சி தலைமையில் வரும் 2026ல் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி ஆட்சி அமைப்போம். அதற்கேற்ற வியூகங்களை 2024 நாடாளுமன்ற தேர்தலில் அமைப்போம்” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.