அரசியல் சாசனத்திற்கு துரோகம் செய்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி – டி.ஆர்.பாலு சாடல்

தமிழ்நாட்டு மக்களின் உணர்வுக்கு எதிராக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசி வருவது, அரசியல் சாசனத்திற்கு செய்யும் துரோகம் என திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு கடுமையாக சாடியுள்ளார். சுதந்திர போராட்ட தியாகிகளை மக்கள் நினைவிலிருந்து அகற்றுவதற்கு தமிழக…

தமிழ்நாட்டு மக்களின் உணர்வுக்கு எதிராக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசி வருவது, அரசியல் சாசனத்திற்கு செய்யும் துரோகம் என திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு கடுமையாக சாடியுள்ளார்.

சுதந்திர போராட்ட தியாகிகளை மக்கள் நினைவிலிருந்து அகற்றுவதற்கு தமிழக அரசு முயற்சிப்பதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டியதை கண்டித்து திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், தமிழ்நாடு சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்றிய நீட் விலக்கு சட்டமுன்வடிவு உள்ளிட்ட பல மசோதாக்கள் ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் கிடப்பில் இருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தன் பொறுப்பை நிறைவேற்றாமல், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுக்கு எதிராக தொடர்ந்து பேசி வருவது, அரசியல் சாசனத்திற்கு செய்யும் துரோகம் என தெரிவித்துள்ளார்.

மாவீரர்கள் மருது சகோதரர்களின் தியாகத்தை தமிழ்நாடு அரசு போற்றி வரும் நிலையில், மருதிருவர் விழா ஒன்றில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டத் தியாகிகளின் வரலாறு கிடைக்கவில்லை எனவும்,  தமிழ்நாடு அரசு தியாகிகளை மறந்துவிட்டதாகவும் பொய்யாக பேசி வருவதாக டி.ஆர்.பாலு குற்றம்சாட்டியுள்ளார்.

மருதுபாண்டியர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வரலாற்றை சித்தரிக்கும் ஊர்திகளை டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் சேர்க்க முடியாது என பா.ஜ.க. அரசு மறுத்த போது இந்த ஆளுநர் ரவி எங்கே போனார்? என கேள்வி எழுப்பிய அவர், சுதந்திர போராட்ட தியாகிகளுக்காக தமிழ்நாடு அரசு அர்ப்பணித்த நினைவு மண்டபங்களையும்,  சின்னங்கள் மற்றும் அரசு இல்லங்களையும் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

விடுதலை நாள் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழில் ஆற்றிய உரையின் ஆங்கில மொழிபெயர்ப்பை கேட்டு வாங்கிப் படித்திருந்தால் ஆளுநர் ரவிக்கு,  இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாட்டு வீரர்களைப் பற்றிய அரிச்சுவடியாவது தெரிந்திருக்கும் எனவும் டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.

திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்தை எழுதிய இராபர்ட் கால்டுவெல் அதிகம் படிக்காதவர் என விமர்சித்ததோடு, விடுதலை நாளை துக்க நாளாக அறிவித்தவர்களைக் கொண்டாடுகிறார்கள் என ஆளுநர் ரவி பேசியதாக குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள் : ஜான்… ஜான்… ஜான்…! – வெளியானது ‘துருவ நட்சத்திரம்’ பட ட்ரெய்லர்

கால்டுவெல் என்ன படித்தார் என்பதைவிட எத்தகைய ஆராய்ச்சி மேற்கொண்டார்,  அதன் விளைவு என்ன என்பதைத்தான் கவனிக்க வேண்டும் என்றும், விடுதலையின் பயன் யாருக்குக் கிடைக்கும் என்பதை விளக்கிய பெரியார், மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டபோது, இந்த நாட்டுக்கு ‘காந்தி தேசம்’ என்று பெயர் வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்ததாகவும் அறிக்கையில் கூறியுள்ளார்.

ஆளுநர் திடீரென்று “என்நன்றி கொன்றார்கும்”  திருக்குறளை படித்திருக்கிறார் என்று விமர்சித்த டி.ஆர்.பாலு, தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்வதை கைவிட்டு, அந்த திருக்குறளுக்கு ஏற்ப நடக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் ஆளுநர் பதவியை விட்டு விலக வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.