உடல் உறுப்பு தானம் செய்வோருக்கு அரசு மரியாதை: கமல்ஹாசன் பாராட்டு!

உடல் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என்கிற முதலமைச்சரின் அறிவிப்பை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வரவேற்றுள்ளார். கடந்த 2007-2008-ம் ஆண்டில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் உடல் உறுப்பு…

உடல் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என்கிற முதலமைச்சரின் அறிவிப்பை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வரவேற்றுள்ளார்.

கடந்த 2007-2008-ம் ஆண்டில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் உடல் உறுப்பு தான திட்டம்  கொண்டு வரப்பட்டது. கடந்த தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் உடல் உறுப்பு தானம் பெறக்கூடிய வகையில் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்படுகிறது.

இந்தியாவில் மட்டுமல்ல உலகிலேயே உடல் உறுப்புகள் தானம் செய்வதில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியிருந்தார். உடல் உறுப்பு தானம் செய்வதன் மூலம் மறைந்த பிறகும் பலரை வாழ வைக்க முடியும்.

இதனைதொடர்ந்து கடந்த 23-ம் தேதி உடல் உறுப்பு தான தினத்தை முன்னிட்டு உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். இதனை அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது நடிகரும், மநீம தலைவருமான கமல்ஹாசன் இந்த திட்டத்தை வரவேற்பதாக தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பதிவிட்டுள்ளர். அந்த பதிவில்,

பிரியத்திற்குரிய குடும்ப உறுப்பினர் மூளைச்சாவு அடைந்த துயர நிலையிலும், அவரது உடல் உறுப்புகளைத் தானம் செய்து பிற உயிர்களைக் காக்க முன்வருவது மகத்தான தியாகம். இந்தத் தியாகத்தைப் போற்றிடும் வகையில் உடல் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் எனும் முதலமைச்சரின் அறிவிப்பை வரவேற்கிறேன், பாராட்டுகிறேன். இந்த அறிவிப்பு உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வைப் பரவலாக்கும்.” என பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.