‘நலந்தானா தந்த நல்ல உள்ளங்கள்’

ஏட்டுக்கல்வி கற்கவில்லை ஆனால் இனிய தமிழ் வசனங்களால் அனைவரையும் கட்டிப்போட்ட ஏ.பி. நாகராஜனை பற்றி தெரியுமா? அக்கம்மா பேட்டை பரமசிவன் நாகராஜன் என்கிற ஏ.பி. நாகராஜன் நான்காம் வகுப்பு படிக்கும்போது குடும்ப பிரச்னை காரணமாக…

ஏட்டுக்கல்வி கற்கவில்லை ஆனால் இனிய தமிழ் வசனங்களால் அனைவரையும் கட்டிப்போட்ட ஏ.பி. நாகராஜனை பற்றி தெரியுமா?

அக்கம்மா பேட்டை பரமசிவன் நாகராஜன் என்கிற ஏ.பி. நாகராஜன் நான்காம் வகுப்பு படிக்கும்போது குடும்ப பிரச்னை காரணமாக மகனின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என கருதிய நாகராஜனின் தாயார் அவரை அவ்வப்போது ஊரில் முகாமிடும் நாடக குழுவிடம் ஒப்படைத்தார். குழந்தை வேஷம் ஏதும் இருந்தால் கொடுத்து அவனை காப்பாற்றுங்கள் என நாடக குழுவிடம் சொன்னார்.

டி.கே.எஸ். சகோதரர்களின் நாடகக் குழுவில் சேர்ந்து, தமிழ் இலக்கியம், இலக்கணம், தமிழ் உச்சரிப்பு என அனைத்திலும் பயிற்சி பெற்ற ஏ.பி.நாகராஜன் அக்குழுவில், சின்னச்சின்ன வேடங்களில் நடித்தும் வந்தார். இப்படி தொடங்கியதுதான் ஏ பி நாகராஜனின் நாடக வாழ்க்கை. ஊர் ஊராகச் சென்ற நாடக குழு நடிகர்களில் உரையாடலை கேட்டு நாகராஜனிடம் தமிழ் ஊறித்திளைத்தது. கன்னித்தமிழால் பிறரை கட்டிப்போட்ட சீர்மிகு உரையாடல்கள் நாகராஜனின் ஆழ்மனத்திற்குள் குடிகொண்டு விட்டது.

இதனையும் படியுங்கள்: மனிதன் மாமனிதன் ஆவது எப்போது?

1953 ஆம் ஆண்டு இவர் எழுதிய நால்வர் என்ற நாடகம் திரைப்படமாக தயாரிக்கப்பட்ட போது திரைக்கதை வசனம் எழுதினார் ஏ.பி. நாகராஜன். திரையுலகம் என்ற பொன்னுலகுக்கு காலடி எடுத்து வைத்த நாகராஜன், 1956 ஆம் ஆண்டில் சிவாஜி கணேசன் நடித்த நான் பெற்ற செல்வம் திரைப்படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதினார். அன்று முதல் சிவாஜியுடன் ஏற்பட்ட நெருக்கம் திருவிளையாடல், திருவருட்செல்வர், திருமால் பெருமை உள்ளிட்ட படங்கள் வரை நீடித்தது.

நடிகர் திலகம் ஒருபுறம் இருக்க, இசையமைப்பாளர் கே.வி மகாதேவன் பாடல்களை இசைத்தால் படம் ஹிட் ஆகாமல் இருக்குமா என அந்தக் காலத்திலேயே விமர்சனங்கள் எழுந்தன. ஏ.பி நாகராஜனுக்கு இது வருத்தமாகத் தான் இருந்தது. எத்தனையோ வெற்றிப்படங்களை தந்த நம்மால் ஒரு சமூக படத்தை தர இயலவில்லையே என்ற மனக்குறை ஏற்பட்டது. தன்னைப் பற்றிய விமர்சனங்களை செவிமடுத்த நாகராஜன் சமூக படம் ஒன்று இயக்கிட ஆர்வம் காட்டினார்.

இதனையும் படியுங்கள்: “உருவான செந்தமிழில் மூன்றானவன்”

அந்த நேரத்தில் பிரபல திரைப்பட தயாரிப்பாளரும் ஆனந்த விகடன் அதிபருமான வாசன் வசம் ஒரு கதை இருந்தது. கொத்தமங்கலம் சுப்பு என்ற எழுத்தாளர் ஆனந்த விகடனில் தொடராக எழுதி வந்த ‘தில்லானா மோகனாம்பாள்’ கதை தான் அது. தில்லானாவை திரைப்படமாக தயாரித்து தன் மீதான விமர்சனத்தை தணிக்க தயாரானார் நாகராஜன். இதற்காக ஜெமினி அதிபர் வாசனிடம் தில்லானா மோகனாம்பாள் கதையை தனக்கு தரும்படி கேட்டுக் கொண்டார் நாகராஜன்.

ஆனால் தில்லானா மோகனாம்பாள் கதையை திரைப்படமாக தயாரிக்க ஜெமினி அதிபர் வாசன் முடிவு செய்திருந்தார். ஏ.பி. நாகராஜன் தன்னை அணுகியபோது இதையே சொல்லி அனுப்பி விட்டார். ஆண்டுகள் சில ஓடின. ஜெமினி வாசனும் தில்லானாவை திரைப்படமாக தயாரிப்பதாக தெரியவில்லை. ஒருநாள் திடீரென வாசனிடம் இருந்து நாகராஜனுக்கு அழைப்பு வந்தது. தில்லானா மோகனாம்பாள் கதையை நீங்களே திரைப்படமாக தயாரித்துக் கொள்ளுங்கள் என வாசன் கூற அப்போதைய காலகட்டத்தில் பெரும் தொகையுடன் காசோலைகளை எடுத்துச் சென்றிருந்தார் ஏ பி நாகராஜன்.

கதையின் உரிமைக்காக மிக சிறு தொகையை மட்டுமே எஸ் எஸ் வாசன் பெற்றுக் கொண்டதால் ஏபி நாகராஜனுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. ஒரு சிறந்த கதைக்கு உரிய தொகையை தராமல் இருக்கிறோமோ என்ற குற்ற உணர்ச்சி அவரை தூங்க விடாமல் செய்தது. எனவே மூலக்கதை எழுதிய கொத்தமங்கலம் சுப்புவிடம் மீதமுள்ள தொகையை அளித்து விடலாம் என தேடி புறப்பட்டார். உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொத்தமங்கலம் சுப்புவிடம் மீதத்தொகையை அளித்தார். காசோலையை பெற்றுக் கொண்ட கொத்தமங்கலம் சுப்பு இப்போதுதான் ஜெமினி வாசன் வந்து தனக்கு நிதி உதவி அளித்தார் என கூறினார். அந்த காசோலை தில்லானா மோகனாம்பாள் கதை உரிமைக்காக ஏ பி நாகராஜன் அளித்த காசோலை தான்.

திரைப்படத்தில் நடித்ததற்காக பணம் பாக்கி இருந்தால் படத்தை வெளியிட நீதிமன்றம் செல்லும் நடிகர்கள் மத்தியில் அந்த காலத்தில் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து திரைப்படங்களை தயாரித்தும் இயக்கியும் நடித்தும் வந்தனர். காலம் கடந்தும் தில்லானா மோகனாம்பாள் நமது நெஞ்சங்களில் சிம்மாசனமிட்டு நடனம் ஆடுவதன் காரணம் தெரிகிறதா?.. அந்த நல்ல மனசு தான் சார் காரணம் என என்ற வார்த்தைகள் மனதுக்குள் எழுகிறதா?

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.