ஆரணி நகராட்சியில் கடந்த 6 ஆண்டுகளாக வரி செலுத்தாத இருந்த ரூ.28 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 6 ஆண்டுகளாக குடிநீர் வரி, கடைவரி, கட்டிட வரி மற்றும் சொத்துவரி உள்ளிட்ட வரிகள் வசூல் செய்யப்படாமல் இருந்தது. இதையைடுத்து நகராட்சியில் பணிசெய்யும் துப்புரவு ஊழியர்கள் உள்ளிட்ட அடிப்படை பணியாளர்களுக்கு கடந்த 4 மாதங்களாக ஊதியம் வழங்காமல் நகராட்சி நிர்வாகம் தத்தளித்து வந்துள்ளது.
இதையடுத்து கடந்த 6 ஆண்டுகளாக வரி செலுத்தாதவர்கள் தங்களின் வரி பாக்கியினை செலுத்த வேண்டும் என நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அனைத்து பகுதிகளிலும் வரி வசூல் செய்யும் பணியில் ஊழியர்கள் மும்மரமாக ஈடுபட்டனர். கடந்த மாதம் நோட்டீஸ் விடுத்தும் இதுவரை வரி செலுத்தாதவர்கள் வீடுகளில் குடிநீர் இணைப்புகளை நகராட்சி நிர்வாகம் துண்டித்து அதிரடியான நடவடிக்கைகளை எடுத்தது.
இதையடுத்து வரி பாக்கி வைத்தவர்கள் தங்களின் வரியினை செலுத்தி வருகின்றனர். குடிநீர் இணைப்புகளை துண்டிப்பதற்கு சில நகர் மன்ற உறுப்பினர்கள் இடையூறு செய்வதாக நகராட்சி ஊழியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுவரை குடிநீர் வரி, கடை வரி, கட்டிட வரி மற்றும் சொத்து வரி உள்ளிட்ட வரி பாக்கிகள் கடந்த ஆறு ஆண்டுகளாக வசூல் செய்யபடாமல் இருந்த நிலையில், தற்போது ரூ.28 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.







