இன்று தாய்மொழி நாள்.. தமிழ் திரையுலகை ஆண்ட தமிழ் இலக்கிய வளம் மிகுந்த ஒரு பாடல்.
கண்ணதாசன், வாலி, டிஎம்எஸ், எம்எஸ்வி ஆகிய ஜாம்பவான்களை இந்தக்காலத்தில் எத்தனைபேருக்கு தெரியுமோ… தெரியாதோ… ஆனால் அவர்கள் தந்த பாடல் இன்றைக்கும் மனதுக்குள் நிற்கிறது.. ரீங்காரமிடுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
காதல், மோதல், அன்பு, பண்பு என மனதின் எண்ணங்களுக்கு ஏற்ற வகையில் பாடல்களை கவிஞர்கள் எழுதுவது வாடிக்கைதான். காதல் பாடல்னா கண்முன்னே வந்துநிற்பார் எம்ஜிஆர். தத்துவ பாடல்னா சிவாஜி வந்து சிந்திக்க வைப்பார்.
இப்படி அவர்கள் இருவருக்குமே கண்ணதாசனும், வாலியும் நிறைய பாடல்கள் தந்திருக்காங்க.
அப்பர், மாணிக்க வாசகர், சுந்தரர், திருஞான சம்பந்தர் மற்றும் சித்தர்கள் இறைவனை புகழ்ந்து பாடியதை படித்திருக்கலாம் கேட்டிருக்கலாம். ஆனால் ஒரு திரைப்படப் பாடல் எழுதும்போது, அதில் எந்தமாதிரி வரிகளை கையாளணுங்கறது ஒரு படைப்பாளியால் மட்டுமே முடியும். மெட்டுக்குள் பாட்டு இருக்க வேண்டும். அதுவும் அதிகபட்சம் ஆறு நிமிடத்திற்குள் இருக்க வேண்டும். காட்சிக்கு பொருத்தமான பாடல் வரிகள் இருக்கணும். இத்தனை போராட்டங்களுக்கு நடுவில் கவிஞர், தன் மேன்மையை, ஆழ்ந்த அறிவை வெளிப்படுத்த வேண்டும்…அப்படி ஒரு பாடல் இது.
உலகை கட்டிக்காக்கும் இறைவனின் பெயரை, புகழை, பாமரனும் புரிந்து கொள்ளும் வகையில் எண்களால் குறிப்பிட்டு பாடலை எழுதியுள்ளார் கவியரசு கண்ணதாசன்.திருவிளையாடல் திரைப்படத்தில் அவர் எழுதிய அந்தப் பாடலை ஔவையாராக நடித்த கே.பி.சுந்தராம்பாள், தனது வெண்கலக் குரலில் பாடியிருப்பார்.
“ஒன்றானவன்,
உருவில் இரண்டானவன்,
உருவான செந்தமிழில்
மூன்றானவன்,
நன்றான வேதத்தில் நான்கானவன்,
நமச்சிவாய என ஐந்தானவன்.
இன்பச் சுவைகளுக்குள்
ஆறானவன். இன்னிசை
ஸ்வரங்களில் ஏழானவன். சித்திக்கும்
பொருள்களில் எட்டானவன்.
தித்திக்கும் நவரச வித்தானவன்.
பத்தானவன்
நெஞ்சில் பற்றானவன்
பன்னிருகை வேலவனைப்
பெற்றானவன் முற்றாதவன்
மூல முதலானவன்
முன்னைக்கும் பின்னைக்கும்
நடுவானவன்
ஆணாகிப் பெண்ணாகி
நின்றானவன் அவையொன்று
தானென்று சொன்னானவன்
தான்பாதி உமைபாதி
கொண்டானவன் சரிபாதி
பெண்மைக்குத் தந்தானவன்
காற்றானவன்
குளிரானவன் நீரானவன்
நெருப்பானவன் நேற்றாகி
இன்றாகி என்றைக்கும்
நிலையாகி ஊற்றாகி
நின்றானவன் அன்பின்
ஒளியாகி நின்றானவன்…”
இப்படிப்பட்ட பாடலை எழுத எட்டாம் வகுப்பு கூட எட்டாத கண்ணதாசனுக்குள் ஞானம் எப்படி வந்தது.. தாய் மொழியாம் தமிழில் பெற்ற புலமை தானே…