ஆசிய விளையாட்டு போட்டியில் இன்று நடந்த ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவை சேர்ந்த நீரஜ் சோப்ரா தங்கத்தையும், மற்றொரு இந்திய வீரரான கிஷோர் குமார் ஜனா வெள்ளியையும் வென்று அசத்தியுள்ளனர்.
19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் செப்டம்பர் 23-ம் தேதி தொடங்கி அக்டோபர் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் சீனா, ஜப்பான், இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, ஈரான், கஜகஸ்தான் உள்ளிட்ட 45 நாடுகள் பங்கேற்றுள்ளன. இந்த போட்டிகளில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டி இன்று நடைபெற்றது.
இதில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 88.88 மீ தூரம் வரையில் ஈட்டி எறிந்து தங்கம் கைப்பற்றினார். இதன் மூலமாக தொடர்ந்து 2வது முறையாக ஆசிய விளையாட்டு போட்டிகளில் தங்கம் கைப்பற்றி நீரஜ் சோப்ரா சாதனை படைத்துள்ளார். இதேபோல் இந்தியாவை சேர்ந்த மற்றொரு வீரரான கிஷோர் குமார் ஜனா 87.54 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து இரண்டாவது இடத்தை பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார்.நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் கடந்த 2018-ம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கம் கைப்பற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக, 2021 டோக்கியோ ஒலிம்பிக், 2021 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றார். இதன் மூலமாக இந்தியா 18 தங்கம், 31 வெள்ளி மற்றும் 32 வெண்கலப் பதக்கத்துடன் 81 பதக்கங்கள் கைப்பற்றி பதக்கப் பட்டியலில் 4ஆவது இடம் பிடித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆசிய விளையாட்டு ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கே தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டு பதக்கங்களும் கிடைத்திருப்பது இதுவே முதல் முறையாகும்