”மக்கள் எதிர்பார்க்கும் படத்தை எடுத்துள்ளீர்கள்” என சித்தா படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்து பூங்கொத்தை பரிசாக நடிகர் சிலம்பரசன் அளித்துள்ளார்.
ETAKI ENTERTAINMENT தயாரிப்பில் சித்தார்த், நிமிஷா சஜயன் நடிப்பில் செப்டம்பர் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது சித்தா. இந்த படத்தை பண்ணையாரும் பத்மினியும் படத்தின் இயக்குனர் அருண்குமார் எழுதி, இயக்கி உள்ளார்.
சித்தார்த்-ன் அண்ணன் திடீரென உயிர் இழக்கிறார். அதன் பின்னர் அவரது குழந்தை தனது அம்மாவை விட தனது சித்தப்பா மீது மிக பாசமாக இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் சித்தப்பாவை சித்தா என்று அன்பாக அழைக்கிறது. ஒரு கட்டத்தில் அந்த குழந்தை காணாமல் போகிறது. அந்தக் குழந்தை ஏன் காணாமல் போகிறது? குழந்தையை கண்டுபிடித்தார்களா? என்பதுதான் படத்தின் மீதி கதை.
இப்படத்திற்கு இசை அமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். பாடல்களை விவேக், யுகபாரதி மற்றும் S.U.அருண் குமார் எழுதி உள்ளனர். முகப்பு பாடலை சந்தோஷ் நாராயணன் பாடி உள்ளர். கண்கள் ஏதோ பாடல் ஏற்கனவே ஹிட் ஆகி விட்டது.
கடந்த வாரம் வெளியான படங்களிலேயே சித்தா படம் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குடும்பமாக இப்படத்திற்கு செல்லத் துவங்கியுள்ளனர். இந்த நிலையில் இப்படத்திற்கு திரைப் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் சிலம்பரசன் சித்தா படக் குழுவினருக்கு பூங்கொத்து அனுப்பி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். “ சித்தா படத்தின் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் எதிர்பார்க்கும் கதைகளை நீங்கள் படமாக எடுத்துள்ளீர்கள்” என சிம்பு தெரிவித்துள்ளார்.







