கோகுல்ராஜ் கொலைவழக்கில் சம்பந்தப்பட்ட 10 பேருக்கும் கடுமையான தண்டனைகளை விதித்தது மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம்.
2015-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24-ஆம் தேதி சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த கோகுல்ராஜ் என்பவர் பள்ளிப்பாளையம் அருகே தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த வழக்கை விசாரித்து வந்த திருச்செங்கோடு டி.எஸ்.பி விஷ்ணுபிரியா அதே ஆண்டு செப்டம்பர் மாதம் 19-ஆம் தேதி உயிரை மாய்த்துக் கொண்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது, கோகுல்ராஜ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் நிறுவனர் யுவராஜ் 2015-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11-ஆம் தேதி நாமக்கல் மாவட்ட சிபிசிஐடி விசாரணை அதிகாரிகளிடம் சரண் அடைந்தார்.
இதனைத்தொடர்ந்து 2015-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25-ஆம் தேதி யுவராஜ் உள்ளிட்ட 5 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். கடந்த 2017-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10-ம் தேதி யுவராஜின் ஜாமீனை ரத்து செய்த உச்சநீதிமன்றம், வழக்கு விசாரணையை 6 மாதங்களுக்குள் முடிக்க உத்தரவிட்டது.
அதனைத்தொடர்ந்து, கடந்த 2019-ஆம் ஆண்டு நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கு விசாரணையை, வேறு நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு கோகுராஜின் தாயார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து வழக்கு விசாரணை மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
இதனைத்தொடர்ந்து கடந்த 2019-ஆம் ஆண்டு மே மாதம் 5-ஆம் தேதி மதுரை மாவட்ட வன்கொடுமை வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் கோகுல்ராஜ் கொலை வழக்கின் விசாரணை தொடங்கியது. இந்நிலையில், கடந்த ஏழு ஆண்டுகளாக நடைபெற்று வந்த கோகுல் ராஜ் கொலை வழக்கின் தீர்ப்பு மார்ச் 5ம் தேதி வழங்கப்பட்டது. இதில் யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.
தொடர்ந்து கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்களை இன்று நீதிபதி சம்பத்குமார் அறிவித்தார். அதில் முதல் குற்றவாளியான யுவராஜ் மற்றும் அருண் ஆகியோருக்கு 3 ஆயுள் தண்டனை விதித்தது மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம். தொடர்ந்து தண்டனை விவரத்தை வாசித்த அவர், குமார், சதீஸ்குமார், ரகு, ரஞ்சீத், செல்வராஜ் ஆகிய ஐந்து பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்தார். மேலும் பிரபு மற்றும் கிரிதருக்கு ஆயுள் தண்டனையுடன் 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ. 5 ஆயிரம் அபராதம் மற்றும் சந்திரசேகரனுக்கு ஒரு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
7 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த கோகுல்ராஜின் வழக்கில் அளிக்கப்பட்டுள்ள இந்த தீர்ப்புக்கு நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களும், பொதுமக்களும் கைதட்டி வரவேற்றுவருகின்றனர்.