மருத்துவ படிப்பை உள்நாட்டிலேயே தொடர மத்திய, மாநில அரசுகள் போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நியூஸ் 7 தமிழ் நடத்தும் கள ஆய்வில் மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
உக்ரைன் – ரஷ்யா இடையே கடந்த சில நாட்களாக போர் நீடித்து வருகிறது. இதனால் அங்கிருக்கும் பிற நாட்டை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் உக்ரைனில் இருந்து வெளியேறிவருகின்றனர். இந்த நிலையில் உக்ரைனில் சிக்கிய இந்திய மாணவர்களை மத்திய அரசு மீட்டு வருகிறது. போர் காரணமாக பாதியிலேயே நாடு திரும்பிய மாணவர்கள் தங்களது படிப்பை உள்நாட்டிலேயே தொடர அரசு போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்கள் அனைவரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டும், மாணவர்களின் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடும் இன்று காலை 10 மணி முதல் நியூஸ் 7 தமிழ் கள ஆய்வு நடத்தி வருகிறது. காலை முதலே நியூஸ் 7 தமிழ் நடத்திய கள ஆய்வில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களும் தங்களது கோரிக்கையை பதிவுசெய்து வருகின்றனர்.
இது தொடர்பாக உக்ரைனில் தங்கி மருத்துவம் பயின்றுவந்த சென்னையை சேர்ந்த ஹரிஹரசுதன் தெரிவிக்கையில், ரொமேனியாவில் இருந்து இந்தியா அழைத்துவரப்பட்டோம். முதலாமாண்டுதான் நான் படித்து வருகிறோம். போரால் நாடு திரும்பியுள்ளோம். உக்ரைனில் மருத்துவம் தங்கி படிப்பதற்கு 40 லட்சம் வரை மருத்துவ கட்டணம் இருக்கிறது. ஆனால் இந்தியாவில் மருத்துவம் படிக்க வேண்டுமானால் எனது மதிப்பெண்ணை பொறுத்து தனியார் கல்லூரியில்தான் சேர முடியும். அதற்கு 1 கோடி ரூபாய் வரை செலவாகும். அவ்வளவு தொகையை என்னால் செலுத்த முடியாது. படிப்பை தொடர்ந்த 3 மாதங்களிலேயே நாடு திரும்பியுள்ளதால் அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை. அரசுதான் போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இதனை தொடர்ந்து, மதுரை மாவட்டத்தை சேர்ந்த மாணவி சிவானி பேசுகையில், 2019ம் ஆண்டு நான் உக்ரைனில் மருத்துவ படிப்பில் மருத்துவம் சேர்ந்தேன். போரால் மிகப்பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளானோம். நீண்ட போராட்டத்திற்கு பிறகுதான் நாங்கள் நாடு வந்துள்ளோம். 3 வருடம் உக்ரைனில் மருத்துவம் முடித்த பிறகு இப்படி போரால் படிப்பு தடைபட்டுள்ளது வருத்தமளிக்கிறது. இதனை தொடர மத்திய மாநில அரசுகள் உள்நாட்டிலேயே படிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.