சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு “நிலையான நாளைக்காக இன்றைய பாலின சமத்துவம்” நிகழ்ச்சியில் சென்னை மேயர் பிரியா ராஜன் மகளிர் தினம் குறித்து பேசியுள்ளார்.
சர்வதேச மகளிர் தினம் இன்று அனைவராலும் கொண்டாடப்படுகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வுடன் கொண்டாட்டம், நிகழ்ச்சிகள் போன்றவை நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னையில் மேயர், துணை மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி ஆகியோர் கலந்துகொண்ட “நிலையான நாளைக்காக இன்றைய பாலின சமத்துவம்” நிகழ்ச்சி நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கொரோனா பரவல் அதிகமாக இருந்த நேரத்தில் சேவையாற்றிய 7 பெண் மருத்துவர்கள் மற்றும் 2 மாவட்ட வருவாய் அலுவலர்களுக்கு மாநகராட்சி சார்பில் விருதுகள் வழங்கி மேயர் பிரியா ராஜன் கவுரவித்தார்.
பின்னர் அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், “நான் பெண்ணாக பிறந்ததற்கு மகிழ்ச்சியும், பெருமையும் கொள்கிறேன். பெண்கள் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதை உள்ளாட்சி தேர்தலில் 50% இட ஒதுக்கீடு கொடுத்து முதல்வர் காட்டியுள்ளார். பெண்களை தூக்கி பேசுவதோ ஆண்களை தாழ்த்தி பேசுவதோ சமத்துவம் கிடையாது. ஒவ்வொரு பெண்ணின் முன்னேற்றத்திற்கு பின்னாலும் கண்டிப்பாக ஒரு ஆண் இருப்பார். சென்னை மேயராக பொறுப்பேற்றுள்ள நான் எல்லாவற்றுக்கும் முடிந்த அளவு சிறப்பாக செயல்படுவேன்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய துணை மேயர் மகேஷ் குமார், எப்போதும் ஆண்களை விட ஒரு படி மேலானவர்கள் பெண்கள். எங்களை இயக்குபவர்களே பெண்கள்தான். என் திருமணம் முடிந்தவுடன் முதல் பிள்ளை பெண் பிள்ளையாக பிறக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். அப்படியே பெண் குழந்தை பிறந்தது என்று பேசினார்.
தொடர்ந்து பேசிய மாணகர ஆணையர் ககந்தீப் சிங் பேடி, “1908ம் ஆண்டு உலக பெண்கள் தினம் முதன்முதலாக நியூயார்க் நகரில் கொண்டாடப்பட்டது. உலக பெண்கள் தினத்தில் பாலின சமத்துவம், பெண்ணுரிமை மற்றும் பெண்களுக்கான மேம்பாடு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தின் தலைநகரத்தின் தலைவர் ஒரு பெண்ணாக உள்ளார். இது தான் பெண்கள் மேம்பாடு” என்று பேசினார்.