மூட்டை மூட்டையாக தமிழ்நாட்டிற்கு கடத்தி வரப்பட்ட கஞ்சா : தேடப்பட்டு வந்த மாவோயிஸ்டு சிக்கியதால் பரபரப்பு..

தமிழ்நாட்டிற்கு கடத்தி விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்த 1,760 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா வேட்டையில் தேடப்பட்டு வந்த மாவோயிஸ்டு சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னைக்கு பெருமளவில் கஞ்சா…

தமிழ்நாட்டிற்கு கடத்தி விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்த 1,760 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா வேட்டையில் தேடப்பட்டு வந்த மாவோயிஸ்டு சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னைக்கு பெருமளவில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் ஜூன் 13 ஆம் தேதி நல்லூர் சுங்கச் சாவடி அருகே, சந்தேகத்திற்கிடமான கார் ஒன்றை மடக்கி அதிகாரிகள் சோதனை செய்தனர்.

சோதனையில் காரின் மேற்பகுதியிலும், அடிப்படுதியிலும் ரகசிய அறை அமைத்து கஞ்சா கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த காரில் இருந்து 80 பார்சல்கள் அடங்கிய 160 கிலோ கஞ்சாவை கண்டெடுத்த அதிகாரிகள் காருடன் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். காரில் கஞ்சா கடத்தி வந்த 3 பேரையும் கைது செய்த அதிகாரிகள், கஞ்சாவை எங்கிருந்து கடத்தி வந்துள்ளனர் என்பது குறித்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் இருவர் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் என்பதும், ஒருவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா ஒடிசா மாநில எல்லைப் பகுதிகளில் இருந்து, ஆந்திராவுக்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து தமிழ்நாட்டிற்கு கடத்தி விற்பனை செய்யப்படுவதும் விசாரணையில் தெரியவந்தது. கைதானவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு சென்னை மண்டல இயக்குனர் அரவிந்தன் தலைமையிலான தனிப்படை ஆந்திரா சென்றது. விசாகப்பட்டினம் மாவட்டம் அரக்கு மற்றும் பாடேறு பகுதியில் முகாமிட்ட தனிப்படையினர் ரகசியமாக கண்காணித்து புலன் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அந்த பகுதியை ஒட்டிய கின்னகருவு கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில், மூட்டை மூட்டையாக கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக தனிப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அங்கு அதிகம் இருப்பதாகவும் கூறப்பட்ட நிலையில், ஆந்திர போலீசாரின் உதவியுடன் அந்த கிராமத்தை சுற்றிவளைத்த தனிப்படையினர் அங்குள்ள சுந்தர் ராவ் என்பவரது வீட்டை சோதனையிட்டனர்.

சோதனையில் அந்த வீட்டில் மூட்டை மூட்டைகளாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயிரத்து 760 கிலோ கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வீட்டில் வைத்து பிடிபட்ட சுந்தர் ராவ் பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த மாவோயிஸ்டு அமைப்பைச் சேர்ந்தவர் என்பது அதிகாரிகளுக்கு தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து கஞ்சாவை பறிமுதல் செய்த தனிப்படையினர், மாவொயிஸ்டு சுந்தர் ராவையும் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர்.

இது குறித்து மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு சென்னை மண்டல இயக்குனர் அரவிந்தன் தெரிவித்ததாவது..

” கைது செய்யப்பட்ட சுந்தர் ராவ் மீது சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டம், வெடிபொருட்கள் சட்டம் உட்பட 8 கொடுங்குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது கைது செய்யப்பட்ட நபரிடம் நடத்திய விசாரணையில் ஒடிசா மாநிலம் மால்கஞ்ச் பகுதியில் இருந்து கஞ்சாவை பெருமளவில் கடத்தி வந்து, ஆந்திராவில் பதுக்கி வைத்து சிறுக சிறுக பல்வேறு வழிகளில் தமிழ்நாட்டுக்கு கஞ்சாவை கடத்தி விற்பனை செய்துவந்தது தெரியவந்தது. இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார் யார் என்பது தொடர்பாக மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.