சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் முன்னிலையில் மாற்று கட்சியினர் தவெகவில் இணையும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அதிமுகவில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு அக்கட்சியில் இருந்து சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்கள் ஆதரவாளர்கள் 15 ஆயிரம் பேருடன் இன்று தவெகவில் இணைத்து கொண்டனர். அப்போது கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த், சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் அமைச்சர்களுக்கு தவெக துண்டை அணிவித்து வரவேற்றார்.
அப்போது அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், “தவெகவுக்கு வந்தவர்களை வரவேற்கிறேன். இளைஞர்களை கவரும் ஆற்றல் உள்ளவராக ஆதவ் அர்ஜூனாவும், புஸ்சி ஆனந்த் பிசி ஆனந்தாகவும் உள்ளனர். திமுக ஆதரவோடு எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக நினைத்தது துரோகம். எம்.ஜி.ஆர் வைத்திருந்தது இயக்கம். அம்மா வைத்திருந்தது இயக்கம். ஆனால், எடப்பாடி பழனிசாமி வைத்திருப்பது கார்பரேட் கம்பனி.
துரோகிகள் அதிமுகவிலேயே தங்கவிட்டனர், நல்லவர்கள் அனைவரும் தவெகவில் இணைந்துள்ளனர். திமுகவுடன் இணைந்து எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகும் எண்ணத்தை இங்கே வந்துள்ளவர்கள் தகர்த்துள்ளனர். ஓடுகின்ற பாம்பை மிதிக்கும் பட்டாளம் இங்கு இருக்கிறது. தடுமாறுபவர்கள் அங்கே இருக்கிறார்கள். அரசியலில் நான் தூக்கி எறியப்பட்ட நேரத்தில், என்னை தாங்கி பிடித்து வருவாய் துறை அமைச்சராக ஆக்கிய வராலாறு, இந்திய துணை கண்ட வரலாற்றில் நம் தலைவர் விஜயை தவிர வேறு யாருக்கும் இல்லை. ஜெயலலிதா படத்தை வைத்துக்கொள்ள முதலமைச்சர் விஜய் அனுமதி கொடுத்தவர். முதலமைச்சர் விஜய் இன்றைக்கு மட்டுமல்ல என்றைக்கும் தமிழ்நாட்டின் நிரந்தர முதலமைச்சர் விஜய் தான் என்று தெரிவித்துள்ளார்.




