ஒரே இரவில் நான்கு ஏடிஎம் மையங்களில் அடுத்தடுத்து நடந்த கொள்ளை சம்பவங்களால் திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலையில் உள்ள மாரியம்மன் கோவில் 10ஆவது தெருவில் உள்ள SBI வங்கி ஏடிஎம் மையத்திற்குள் நேற்றிரவு மர்ம நபர்கள் நுழைந்து ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தைக் கொள்ளை அடித்து சென்றுள்ளனர். இதேபோன்று தேனி மலை மற்றும் போளூர் பகுதிகளில் உள்ள SBI வங்கிக்குச் சொந்தமான ஏடிஎம் மையங்களில் இயந்திரங்களை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
மேலும், கலசபாக்கம் பகுதியில் உள்ள இந்தியா ஒன் ஏடிஎம் மையத்திலும் இயந்திரம் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. 4 ஏடிஎம் மையங்களிலும் மொத்தம் 80 லட்சம் ரூபாய் வரை கொள்ளை போனதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டவர் பயன்படுத்தி கார் மற்றும் அதிலிருந்து இறங்கிச் செல்லும் நபர் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன..
கொள்ளையர்கள் தங்கள் கைரேகை மற்றும் வீடியோ பதிவை காவல்துறையினர் கண்டுபிடித்து விடுவார்கள் என்பதற்காக ஏடிஎம் இயந்திரம் மற்றும் சிசிடிவி உள்ளிட்டவற்றை தீ வைத்து எரித்து சென்றுள்ளனர்.
அடுத்தடுத்து நான்கு இடங்களில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தைக் கொள்ளை அடித்து பின்னர் வெல்டிங் இயந்திரம் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை தீ வைத்து எறித்துச் சென்றுள்ளனர். இதில் ஏடிஎம் மையத்தில் பொருத்தி வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா மற்றும் ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவை எரிந்து நாசமானதால் திருடர்களைக் கண்டுபிடிக்க காவல்துறையினர் திணறி வருகின்றனர்.
நள்ளிரவில் ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்ட தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற திருவண்ணாமலை நகரக் காவல் நிலைய போலீசார், போளூர் நகர காவல் நிலைய போலீசார், கலசபாக்கம் காவல் நிலைய போலீசார் ஏடிஎம் மையத்தில் கேஸ் வெல்டிங் இயந்திரம் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை அடித்துச் சென்றதை அறிந்து ஏடிஎம் மையத்தின் ஷட்டரை பூட்டி மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நான்கு ஏ டி எம் மையங்களில் பணம் கொள்ளை சம்பவத்தின் எதிரொலியாக மாவட்ட எல்லைப் பகுதிகளில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். திருவண்ணாமலை வேலூர் இராணிப்பேட்டை ஆகிய மூன்று மாவட்ட எல்லை பகுதியான கண்ணமங்கலம் நெடுஞ்சாலையில் உள்ள டோல்கேட் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
– யாழன்







