அமமுகவிற்கு கொடுத்து தான் பழக்கம், வாங்கி பழக்கம் இல்லை: டிடிவி தினகரன்

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் பண நாயகம் தான் நடைபெறுகிறது, ஜனநாயகம் இல்லை என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட…

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் பண நாயகம் தான் நடைபெறுகிறது, ஜனநாயகம் இல்லை என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அமமுக மாவட்ட செயலாளர் சிவபிரசாந்த் இல்ல நிகழ்ச்சியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று கலந்து கொண்டார்.

நிகழ்ச்சிக்கு பிறகு டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அமமுக மாவட்ட செயலாளர் சிவபிரசாந்த் ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உடனயே சிறப்பாக செயல்பட்டார். அவருடன் சேர்ந்து போர் களத்தில் அமமுக தொண்டர்களும் நிர்வாகிகளும் விறுவிறுப்பாக தேர்தல் வேலைகளை துவங்கினர். ஆனால் தேர்தல் ஆணையம் எங்களுக்கு சின்னம் வழங்கவில்லை. அதற்காக நாங்கள் நீதிமன்றம் வரை சென்று போராடி சின்னத்தை பெற்றிருக்கலாம் . ஆனால் அதெற்கெல்லாம் எங்களுக்கு நேரமில்லை. புதிய சின்னத்தை பெற்று அதில் நின்றுயிருந்தால் குழப்பம் ஏற்பட்டிருக்கும். அதனால்தான் நிற்கவில்லை.

அமமுக தேர்தலில் இருந்து வாபஸ் பெற்று விட்டது. தேர்தலை சந்திக்கவில்லை என்றதும் பலர் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள். கொண்டாடியவர்கள் டெபாசிட் இழக்காமல் இருக்க வேண்டும். காரணம் இங்கு சிலர் பணம் மூட்டையுடன் முகாமிட்டு உள்ளனர். ஈரோட்டில் பண நாயகம் தான் நடைபெறுகிறது. ஜனநாயகம் இல்லை என்று கூறினார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர், அமமுகவிற்கு கொடுத்து தான் பழக்கம், வாங்கி பழக்கம் இல்லை. சிலர் அமமுகவை பற்றியும், வேட்பாளரை பற்றியும் தவறாக பேசுகின்றனர். சில மரமண்டைகளுக்கு எங்களை பற்றி புரியாது . இந்த தேர்தலில் கணிசமான வாக்குகளை நாங்கள் பெற்று இருப்போம். ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை தமிழகத்தில் நிச்சசயம் மலரச் செய்வோம். வரும் பாராளுமன்ற தேர்தலில் அமமுக குக்கர் சின்னத்தில் போட்டியிடும் என தெரிவித்தார்.

  • பி. ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.