நீலகிரியில் மக்களை அச்சுறுத்தி வரும் புலியை விரைவில் பிடித்துவிடுவோம் என வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
நீலகிரியில் மசினகுடி, சிங்காரா உள்ளிட்ட பகுதிகளில் 40க்கும் மேற்பட்ட கால்நடை களையும், 4 பேரையும் அடித்துக் கொன்ற புலியை பிடிக்க வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை மேற்கொண்டுள்ளனர். 5 ட்ரோன் கேமராக்கள், 85க்கும் மேற்பட்ட தானியங்கி கேமராக்கள், இரண்டு கும்கி யானைகள், மூன்று பயிற்சி பெற்ற மோப்ப நாய்கள் புலியை தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
மேலும் ஐம்பதுக்கும் மேற்பட்ட வன ஊழியர்கள், 20க்கும் மேற்பட்ட அதிரடி படையினர், 8 தமிழ்நாடு வன உயரடுக்கு படையினர் உட்பட பல்வேறு குழுக்களாக பிரிந்து புலியை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, புதர்களில் பதுங்கியிருக்கும் விலங்குகளின் வெப்பநிலை மூலம் அவற்றை கண்டறியும் அதிநவீன கேமரா பயன்படுத்தப்படுகிறது.
இதன் அடிப்படையிலும் புலியை தேடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. ட்ரோன் கேமராவை கொண்டு வனப்பகுதிக்குள் சென்று புலியை கண்டறியும் பணியிலும் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதற்காக 3 பேர் கொண்ட கேமரா குழுவினர் சிங்காரா வனப்பகுதியில் முகாமிட்டுள்ளனர்.
இந்நிலையில், கோவையில் உள்ள தமிழ்நாடு வனஉயிர் பயிற்சியகத்தில் நடைபெற்ற வன உயிரின வார நிறைவு விழாவில் பங்கேற்ற அமைச்சர் ராமச்சந்திரன் செய்தியாளர் களுக்கு பேட்டியளித்தார். அப்போது, மக்களை அச்சுறுத்தி வரும் புலியை பிடிக்கும் பணியில், சிறப்பு பயிற்சி பெற்ற கேரள வனத்துறையினரும் இணைந்துள்ளதாகத் தெரிவித்தார். மழை உள்ளிட்ட நடைமுறை சிக்கல்கள் காரணமாக புலியை பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டாலும், விரைவில் பிடித்துவிடுவோம் என்றும் அமைச்சர் ராமசந்திரன் உறுதியளித்தார்.








