திருவாரூர் அருகே, கட்டாய திருமணம் செய்து வைத்ததால் விரக்தியடைந்த பள்ளி மாணவி குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து உயிரிழப்புக்கு முயன்றார். விஷம் கலந்திருப்பது தெரியாமல் மிச்சமிருந்த குளிர்பானத்தை குடித்த தங்கையும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
திருக்காரவாசல் பகுதியைச் சேர்ந்த ஹரி கிருஷ்ணன் என்பவரின் 17 வயது மகளுக்கும், விழுப்புரம் மாவட்டம் ஆண்டி குப்பத்தைச் சேர்ந்த 25 வயது சிவகுமாருக்கும் கடந்த 2011ம் ஆண்டு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. திருமணத்தில் விருப்பம் இல்லாத சிறுமி வீட்டிலிருந்து வெளியேறினார்.
அதிர்ச்சியடைந்த பெற்றோர், அந்த சிறுமியின் 13 வயது தங்கையை சிவக்குமாருக்கு திருமணம் செய்து வைத்தனர். எனினும், திருமணம் பிடிக்காத 13 வயது சிறுமி வீட்டிலிருந்து வெளியேறி, பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டார். பின்னர் பள்ளியில் சேர்க்கப்பட்ட அந்த சிறுமி, தற்போது 11ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், சிவக்குமார் தரப்பினர், சிறுமியை தங்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்குமாறு தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த சிறுமி, குளிர்பானத்தில் எலிமருந்தை கலந்து குடித்து உயிரிழப்புக்கு முயன்றார்.
எலிமருந்து கலந்திருப்பது தெரியாமல், மிச்சம் வைத்திருந்த குளிர்பானத்தை, அவரது தங்கையும் குடித்துள்ளார். இதனையறிந்த சிறுமிகளின் உறவினர்கள் இருவரையும் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். சிவக்குமார் உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.








