சென்னை போலீசார் நடத்திய விசாரணையின் போது நடிகர் சித்தார்த் மன்னிப்பு கோரியுள்ளார்.
கடந்த ஜன.5ம் தேதி பிரதமர் பஞ்சாப்பிற்கு பயணம் மேற்கொள்ளவிருந்தார். அப்போது, அவர் பயணிக்கும் சாலையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததால் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டதாக அவர் தனது பயணத்தை ரத்து செய்துவிட்டார். இது குறித்து தனது கருத்தை ட்விட்டரில் சாய்னா பதிவிட்டிருந்தார். அதற்கு நடிகர் சித்தார்த் பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலை எதிர்த்து ஆபாசமான கருத்தை பதிவிட்டிருந்தார். இதனால் சித்தார்த்திற்கு கடும் கண்டனங்கள் எழுந்தது.
இதனால், சித்தார்த் சாய்னாவிடம் மன்னிப்பு கோரினார். மேலும் பிரபல பெண் ஊடகவியலாளர் குறித்தும் அவதூறான கருத்துக்களை பதிவிட்டதால் கடும் சர்ச்சைகள் வெடித்தது. இதனால் நடிகர் சித்தார்திடம் விசாரணை நடத்துமாறு தேசிய மகளிர் ஆணையம் சென்னை போலீசாருக்கு புகார் அளித்து இருந்தனர்.
இதுதொடர்பாக கடந்த மாதம் 10 ம் தேதி சித்தார்த்துக்கு சென்னை போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக வீடியோ கான்பரன்ஸ் மூலமாக வாக்குமூலம் அளித்த நடிகர் சித்தார்த் பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவால் பற்றி அவதூறாக கருத்து தெரிவித்ததற்கும், பெண் ஊடகவியலாளரை அவதூறாக பேசிய விவகாரத்திலும் மன்னிப்பு கேட்பதாக தன்னுடைய வாக்கு மூலத்தில் தெரிவித்திருப்பதாக சென்னை மாநகர போலீசார் தெரிவித்தனர்.
முன்னதாக சமூக வலைதளத்தில் தான் பதிவிட்ட கருத்துக்கு எதிராக பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் நடிகர் சித்தார்த் ட்விட்டரில் மன்னிப்பு கோரியது குறிப்பிடத்தக்கது. இரண்டு புகார்கள் தொடர்பாகவும் நடிகர் சித்தார்த்தின் வாக்குமூலத்தை தேசிய மகளிர் ஆணையத்திற்கு சென்னை மாநகர போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.








