“வெள்ள நிவாரணத்தை ரூ.12,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.12,000 வழங்க வேண்டும் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் டிச. 3, 4 ஆம்…

சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.12,000 வழங்க வேண்டும் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் டிச. 3, 4 ஆம் தேதிகளில் பெய்த தொடர் கனமழை காரணமாக பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து மீட்புப் பணிகள், நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பல பகுதிகளில் இன்னும் மழைநீர் வடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

அரசு தரப்பிலும், தன்னார்வலர்கள் தரப்பிலும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதோடு வெள்ள நீர் சூழந்துள்ள பகுதிகளில் சிக்கியிருப்போருக்கு பல்வேறு தரப்பினர் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். குறிப்பாக உணவு, குடிநீர் வழங்குவதோடு, படகுகள் வாயிலாக வெள்ளத்தில் சிக்கியிருப்போரை மீட்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

எனவே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக ரேஷன் கடைகள் மூலம் டோக்கன் முறையில் ரூ.6,000 வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது. இந்நிலையில் இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சொற்பத்தொகையே நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இதையும் படியுங்கள்:  தாமிரபரணியில் அதிகரிக்கும் நீர்வரத்து – கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

எனவே அரசு அறிவித்த வெள்ள நிவாரண தொகையான ரூ.6,000-க்கு பதிலாக ரூ.12,000 வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும் எண்ணெய் கழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரு.25,000 நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். வெள்ளத்தால் பொதுமக்கள், வணிகர்கள், தொழில் நிறுவனங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை புறநகரில் குண்டும், குழியுமாக உள்ள சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் சுமார் இரண்டாயிரம் ஏக்கருக்கு மேல் நிலங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றை உடனடியாக அதிகாரிகளை அனுப்பி பாதிக்கப்பட்ட நெற்பயிர் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25,000 இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

அதேபோல், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் போன்ற மாவட்டங்களிலும், நஞ்சை நிலங்களில் பயிர் செய்திருந்த நெற்பயிர்கள் பெய்த கன மழையால் முழுவதுமாக சேதமடைந்துள்ளன என்று அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர். எனவே, ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட நெற்பயிர் ஏக்கர் ஒன்றுக்கு  ரூ.17,000 வழங்கிட வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.