ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணியின் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் களமிறங்கியுள்ளார். அவரின் அரசியல் பயணம் குறித்து தற்போது பார்க்கலாம்.
தந்தை பெரியாரின் பேரனும், சொல்லின் செல்வர் சம்பத்தின் மகனுமான ஈவிகேஎஸ் இளங்கோவன், 1948ம் ஆண்டு ஈரோட்டில் பிறந்தார். சென்னை மாநில கல்லூரியில் படிக்கும்போது மாணவரணி காங்கிரஸ் செயலாளராக இருந்த இவர், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர், நகர தலைவர், மாவட்ட தலைவர் என அடுத்தடுத்த பதவிகளை பெற்றார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
முதல்முறையாக 2000-ம் ஆண்டு முதல் 2002-ம் ஆண்டு வரை தமிழ்நாடு காங்கிரஸின் தலைவர் பதவியை ஈவிகேஎஸ் இளங்கோவன் வகித்தார். பின்னர், 2003-ம் ஆண்டு வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவராகவும், 2015 முதல் 2017 வரை மீண்டும் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராகவும் பொறுப்பு வகித்தார்.
1984-ம் ஆண்டு சத்தியமங்கலம் தொகுதியில் இருந்து சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன், 2004-ம் ஆண்டு கோபிசெட்டிபாளையம் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டு, மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சராக பொறுப்பு வகித்தார்.
அதன் பிறகு அவர் சந்தித்த தேர்தல்களில் தொடர்ந்து தோல்வியை தழுவும் நிலை ஏற்பட்டது. 2009, 2014, 2019 மக்களவை தேர்தல்களில் அவர் அடுத்தடுத்து தோல்வியடைந்தார். இந்நிலையில், தற்போது, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் களம் கண்டுள்ளார்.