ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் முறைகேடு நடைபெறுவதாக கூறி செங்கோட்டையன் தலைமையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், தமாகா நிர்வாகிகள் ஒன்றாக இணைந்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளித்தனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம் தேதி திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். திருமகன் ஈவேராவின் மறைவு தமிழ்நாடு அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு, பிப்ரவரி 27-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.
இதனை தொடர்ந்து இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் , அதிமுக சார்பில் கே.எஸ் தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதையடுத்து அந்தந்த கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள், ஈரோடு கிழக்கு தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்து ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் மிகவும் பரபரப்பாக காட்சியளிக்கிறது.
இந்த நிலையில் ஈரோடு இடைத்தேர்தலில் முறைகேடு நடைபெறுவதாக அதிமுக குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில், செம்மலை, திண்டுக்கல் சீனிவாசன், விஜய பாஸ்கர், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கடம்பூர் ராஜு உள்ளிட்ட அதிமுக மற்றும் தமாகா நிர்வாகிகள் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான கிருஷ்ணன் உண்ணியை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய செங்கோட்டையன், ஈரோடு கிழக்கில் 110-க்கும் மேற்பட்ட இடங்களில் ஈவிகேஎஸ் இளங்கோவனின் ஆதரவாளர்கள் கொட்டகை அமைத்து, தேநீர், பணம் பட்டுவாடா செய்து வருகின்றனர். இன்றைய தேதி வரை ஈவிகேஎஸ் இளங்கோவன் ரூ.35,64,00,00 செலவு செய்துள்ளார். அதுகுறித்து ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளோம். ஆனால் தேர்தல் ஆணைய அதிகாரிகள் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
முறைகேடாக உரிய அனுமதியின்றி அரசு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள செட்டுக்களுக்கான செலவுத் தொகையை காங்கிரஸ் வேட்பாளர் தேர்தல் செலவு கணக்கு சேர்க்க வேண்டும். தேர்தல் விதிமுறைகளை மீறி சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள செட்டுகள் அனைத்தையும் உடனடியாக அகற்ற வேண்டும்
வாடகை எடுத்து பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் சேர்களுக்கான வாடகை செலவை காங்கிரஸ் வேட்பாளர் செலவு கணக்கில் சேர்க்க வேண்டும். தேர்தல் விதிமுறைகளை மீறி ஆளுங்க கட்சியுடன் பயன்படுத்தும் வாகனங்களில் கொடி மற்றும் சின்னங்களை அகற்ற வேண்டும்.அரசு முத்திரை சின்னத்தை தேர்தல் விதிமுறைகளை மீறி வாகனங்களில் பயன்படுத்தும் ஆளும் கட்சியினர் மீது உரிய சட்ட விதிமுறைப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுகவினர் தொடர்ந்து அதிகார துஷ்பிரயோகம் செய்து வருகின்றனர்
தேர்தல் ஆணையத்தின் சட்ட திட்டங்கள் மற்றும் விதிமுறைகளை மதிப்பும் கடைப்பிடிப்பதும் இல்லை.
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தல் நடத்தும் அலுவலர் ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்படுகிறார் என வாக்காளர்கள் சந்தேகப்படும் அளவிற்கு அவரது செயல்பாடுகள் இருப்பதாக தெரிகிறது. இந்திய தேர்தல் ஆணையம்,மாநில தேர்தல் அதிகாரி, மாவட்ட தேர்தல் அதிகாரி, தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் என அனைவருக்கும் புகார் மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளது. புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறோம்
தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதே எங்களது கோரிக்கையாக உள்ளது. அதற்கு தேர்தல் ஆணையமும் செவிசாய்க்கும் என்று நம்புகிறோம் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
- பி. ஜேம்ஸ் லிசா










