ஈரோடு இடைத்தேர்தல்; அதிமுகவின் நட்சத்திர பரப்புரையாளர்கள் பட்டியல் வெளியீடு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பாக பரப்புரையில் ஈடுபடும் நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியலில் எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் அடுத்த மாதம் 27ந்தேதி இடைத் தேர்தல் நடைபெற…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பாக பரப்புரையில் ஈடுபடும் நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியலில் எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் அடுத்த மாதம் 27ந்தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.  இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக, அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து  போட்டியிடுகின்றன.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஒவ்வொரு கட்சியிலிருந்தும் பரப்புரையில் ஈடுபடவுள்ள நட்சத்திர பரப்புரையாளர்களின் பட்டியலை அரசியல்  கட்சிகள் சார்பாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலரிடம் அளிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே திமுக, நாம் தமிழர், தேமுதிக மற்றும் வேட்புமனுவை வாபஸ் பெற்ற அமமுக உள்ளிட்ட கட்சிகள் தங்களது நட்சத்திர பரப்புரையாளர்களின் பட்டியலை வெளியிட்டது. அதிமுக இரு அணிகளாக பிரிந்து தனித்தனியாக வேட்பாளர்களை அறிவித்திருந்ததால் நட்சத்திர பரப்புரையாளர்கள் பட்டியல் வெளியாகவில்லை. தற்போது ஓபிஎஸ் தரப்பின் செந்தில் முருகன் வாபஸ் பெற்றதை தொடர்ந்து கே.எஸ்.தென்னரசு அதிமுகவின் அதிகாரப்பூர்வமான வேட்பாளராக  அறிவிக்கப்பட்டார்.

ஈரோடு கிழக்கில் பரப்புரையில் ஈடுபடவுள்ள நட்சத்திரங்களின்  பட்டியல்   தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டு வெளியிடப்பட்டு வருகிறது. திமுக, தமாகா, அமமுக உள்ளிட்ட கட்சிகள் சார்பாக நட்சத்திர பரப்புரையாளர்கள் பட்டியல் அளிக்கப்பட்டு வெளியாகியிருந்தது. தற்போது காங்கிரஸ், அதிமுக, கொங்குதேச மறுமலர்ச்சி மக்கள் கட்சி, நாடாளும் மக்கள் கட்சி உள்ளிட்டவை சார்பாகவும் நட்சத்திர பரப்புரையாளர்கள் பட்டியல் அளிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

-காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜூனா கார்கே, கே.எஸ்.அழகிரி, ப சிதம்பரம் உள்ளிட்ட 35 பேர் கொண்ட நட்சத்திரங்கள் பெயர் வெளியாகியுள்ளது.

-அதிமுக சார்பாக எடப்பாடி பழனிசாமி, ஒ பன்னீர்செல்வம் என இருதரப்பிலும் தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலரிடம் நட்சத்திர பேச்சாளர் பட்டியல் அளிக்கப்பட்டிருந்தது. இரு பட்டியலும் தலைமை தேர்தல் ஆணையத்திற்கு தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலரால் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அதன்படி தேர்தல் ஆணையம் வெளியிட்ட பட்டியலில்  இபிஎஸ் அணியைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன், தமிழ் மகன் உசேன், முனுசாமி உள்ளிட்ட 40 பேர் பட்டியல் இடம்பெற்றுள்ளனர். அதிமுகவின் நட்சத்திர வேட்பாளர் பட்டியலில் ஓபிஎஸ் அணியினர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.