மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
அண்மையில் தமிழ்நாட்டில் பெய்த மழை காரணமாக, பெரிய அளவில் பனிப்பொழிவு இல்லாமல் இருந்த நிலையில், தற்போது மீண்டும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பனிப்பொழிவானது அதிக அளவில் காணப்படுகிறது.
அந்த வகையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக பனிப்பொழிவு அதிக அளவில் காணப்பட்டு வருகிறது. குறிப்பாக மதுரை மாவட்டத்தில் செல்லம்பட்டி, கருமாத்தூர், வாலாந்தூர், குப்பணம்பட்டி, கணவாய்பட்டி, சமத்துவபுரம், சின்னகட்டளை, மானுத்து, எழுமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதலே பனி பொழிவு கடுமையாக காணப்படுகிறது. இந்த பகுதிகளில் வெள்ளை போர்வை போர்த்தியது போல கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டதால், இரவு நேரத்தை போலவே காட்சியளித்தது.
வழக்கத்தை விட இன்று அதிகமான பனிப்பொழிவு ஏற்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு, பள்ளி, கல்லூரிகள், மற்றும் பணிக்கு செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். விடிந்து 8 மணிக்கு மேலாகியும் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் வாகனங்களை ஓட்ட முடியாமல் சிரமப்பட்டனர். அனைத்து வாகன ஓட்டிகளும் தங்களது முகப்பு விலக்குகளை எரியவிட்டபடியே சென்றனர். அந்த அளவிற்கு கடும் பனிப்பொழிவு மற்றும் பனிமூட்டம் காணப்பட்டது.
- பி. ஜேம்ஸ் லிசா








