நீட் தேர்வால் ஏற்படும் ஒவ்வொரு மரணத்திற்கும் எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்க வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை, எம்.ஜி.ஆர் நகரிலுள்ள தமிழ்நாடு அரசு மேல்நிலைப்பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மருத்துவம் மற்றும் மக்கள்
நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், துறை முதன்மை செயலாளர் செந்தில்குமார், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், துணை மேயர்
மகேஷ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு ஆல்பெண்டசோல் எனப்படும்
குடற்புழு நீக்க மருந்துகள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் ஒரு வயது முதல் 20 வயதுடைய நபர்கள் 2 கோடிக்கும் மேல் இந்த மாத்திரையை பெறுகிறார்கள். 20 முதல் 30 வயதுடைய கருவுறாத பெண்கள் 50 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு இந்த குடற்புழு நீக்கம் மாத்திரைகள் வழங்கப்படுகிறது. இதற்காக 6 கோடியே 68 லட்சம் ரூபாய் அரசின் மூலம் செலவு செய்யபடுகிறது. 20 முதல் 30 வயதுடைய பெண்கள் வரும் 16-ஆம் தேதி நடைபெறும் சிறப்பு முகாமில் மீண்டும் மாத்திரைகளை பெற்று கொள்ளலாம் என்றார்.
குடற்புழு நீக்கம், ரத்த சொகையில் இருந்து விடுப்பு, நினைவாற்றல் கூடல், நோய் எதிர்ப்புச் சக்தி வலு பெற போன்றவைகளுக்கு இந்த மாத்திரை உட்கொள்ளப்படுகிறது. சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் இன்று மட்டும் 900 பேர் இந்த மாத்திரைகளை உட்கொண்டு உள்ளனர். அதில் 3 குழந்தைகள் மயக்கம் அடைந்து உள்ளனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சைக்கு பின் நன்றாக உள்ளனர். இது மாத்திரை உட்கொண்டதால் அல்ல, பயம் மற்றும் பதட்டத்தினால் இது நடந்து உள்ளது என விளக்கமளித்தார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு நீட் தேர்வில் வெறும் 39 சதவிகிதம் தான் தேர்வு அடைந்து இருந்தனர். இன்று 51.29 சதவிகிதமாக அது உயர்ந்து இருக்கிறது. பயிற்சி எல்லா பள்ளிகளிலும் நடைபெற்று வருகிறது. கூடுதலாக மாணவ மாணவிகள் நீட் தேர்வு எழுதியதால், தேர்ச்சி விகிதம் குறைவு போல தெரிகிறது என்றார். எடப்பாடி பழனிச்சாமி நீட் தேர்வால் மரணமடைந்த பெண் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து இருப்பது அபத்தமானது. இது பிள்ளையை கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுவது போல விந்தையாக இருக்கிறது. அவர்கள் ஆட்சியில் தான் நீட் தேர்வு தமிழ்நாட்டிற்கு வந்துள்ளது.
நீட் தேர்வினாள் ஏற்படும் ஒவ்வொரு மரணத்திற்கும் எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்க வேண்டும். ஒன்றிய அரசின் தேர்வு குழுமம், இரவு நேரத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட்டு இருப்பது குறித்து கவனித்து இருக்க வேண்டும். இதனால் மாணவ மாணவிகள் அனைவரும் இரவு நேரத்தில் முடிவுகளை பார்க்கும் போது, ஆதரவுக்கான நபர் அருகில் இல்லாத சூழல் கூட நிலவி இருக்கலாம். ஒன்றிய அரசு இதனை கவனித்து இருக்க வேண்டும். ஏன் இவ்வாறு செய்தார்கள் என தெரியவில்லை. நாங்கள் மரணித்த மாணவியின் வீட்டிற்கு நேரில் சென்று எங்கள் சார்பில் ஆறுதல் தெரிவிக்க உள்ளோம் என்றார்.
மாணவர்கள் உக்ரைனில் அவரவர் விருப்பம் போல போய் படிதுள்ளார்கள். அவர்களுக்கு உக்ரைன் பல்கலைக்கழகங்கள், எந்த பல்கலை கழகத்தில் படிக்க வேண்டும் என அறிவுறுத்தி வருகிறது. எனவே, அவர்கள் அறிவுறுத்தலை பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கேட்டால் நன்றாக இருக்கும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
-இரா.நம்பிராஜன்







