தமிழகத்தில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த E-Box எனப்படும் பயிற்சி முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கையை விட இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் 67,787 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்ற ஆண்டை விட தமிழகத்திலிருந்து தேர்ச்சி பெற்ற மாணவர்களை விட இந்த வருடம் 10,572 மாணவர்கள் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழக மாணவர்கள் மற்ற தேர்வுகளை போல நீட் தேர்வையும் எதிர்கொள்ள தொடங்கிவிட்டதற்கான சான்று இது.
அதேபோல் தமிழ் மொழியில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கையும் 31,965 ஆக அதிகரித்துள்ளது. இந்திய அளவில் பட்டியலின மாணவர்களின் தேர்ச்சி விகிதம் சென்ற ஆண்டை விட இந்த வருடம் 15 சதவீதமும், பழங்குடியின மாணவர்களின் தேர்ச்சி 18 சதவீதமும் உயர்ந்துள்ளது.
மேலும் இந்த வருடம் நீட் தேர்ச்சி விகிதம் குறைந்ததற்கு காரணம் திமுகவின் சுயலாப சிந்தனைகளும், இயலாமையின் மறுவுருமாக திகழும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் ஆவார். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த E-Box எனப்படும் பயிற்சி முறையை திமுக ஏன் கைவிட்டது என்பதை மக்களுக்கு விளக்க வேண்டும்.
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் முந்தைய திமுக ஆட்சியில் Fixing முறையில தனியார் மருத்து கல்லூரிகளில் எவ்வாறு மருத்துவ சேர்க்கை நடைபெற்றது என்பதை ஒரு நேர்காணலில் ஒப்புக்கொண்டார். அந்த நடைமுறையை மீண்டும் கொண்டு வந்து ஊழலில் கொழிக்க நீட் தேர்வை திமுக அரசு எதிர்த்து வருகிறது.
திமுக ஆட்சியில் மறுக்கப்பட்டு வரும் நீட் பயிற்சியை பொருட்படுத்தாமல் பல அரசுப்பள்ளி மாணவர்கள் தங்கள் சொந்த முயற்சியால் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பாஜக சார்பில் பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன்.
இந்த ஆண்டின் நீட் தேர்வில் அகில இந்திய அளவில் தேர்ச்சி பெற்ற முதல் 50 மாணவர்களில் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த 9 பேர், குஜராத் சேர்ந்த 5 பேர், மற்றும் ஆந்திராவிலிருந்து 4 பேர் இடம் பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதத்தை தமிழகத்துடன் ஒப்பிடுகையில் கேரளா, ஆந்திரா, குஜராத் மற்றும் கர்நாடகா மாநில மாணவர்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். அந்த மாநில அரசு இதற்காக எடுத்து வரும் முயற்சிகளை அறிந்து தமிழகத்தில் செயல்படுத்த வேண்டும்.
மேலும் கைவிடப்பட்ட E-Box முறையை உடனடியாக செயல்படுத்திட வேண்டும். சமூக நீதி மற்றும் சம உரிமைக்கு எதிராக செயல்பட்டு அரசுப்பள்ளி மாணவர்களை வஞ்சிப்பதை திமுக அரசு உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்.




