இங்கிலாந்து – தென்னாப்பிரிக்கா இன்று பலப்பரிட்சை! மற்றொரு ஆட்டத்தில் இலங்கை – நெதர்லாந்து மோதல்

உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 20-ஆவது ஆட்டத்தில் இங்கிலாந்து – தென்னாப்பிரிக்கா அணிகள் இன்று மோதுகின்றன. இரு அணிகளுமே கடைசி ஆட்டத்தில் அதிா்ச்சிகரமான தோல்வியைச் சந்தித்து இந்த ஆட்டத்துக்கு வந்துள்ளன. நடப்பு சாம்பியனான இங்கிலாந்து –…

உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 20-ஆவது ஆட்டத்தில் இங்கிலாந்து – தென்னாப்பிரிக்கா அணிகள் இன்று மோதுகின்றன. இரு அணிகளுமே கடைசி ஆட்டத்தில் அதிா்ச்சிகரமான தோல்வியைச் சந்தித்து இந்த ஆட்டத்துக்கு வந்துள்ளன.

நடப்பு சாம்பியனான இங்கிலாந்து – ஆப்கானிஸ்தானிடமும், தென்னாப்பிரிக்கா – நெதர்லாந்திடமும் தோல்வி கண்டிருந்தன. இங்கிலாந்தை பொருத்தவரை, பேட்டிங், பௌலிங் என இரண்டிலுமே பிரதான வீரா்களைக் கொண்டிருந்தும் தடுமாறி வருகிறது. காயம் காரணமாக முதல் 3 ஆட்டங்களில் பங்கேற்காத பென் ஸ்டோக்ஸ், இந்த ஆட்டத்தில் களம் காண வாய்ப்புள்ளதாகத் தெரிவது, இங்கிலாந்துக்கு பலம் சேர்க்கும். பேட்டிங்கில், ஜோ ரூட், டேவிட் மலான் ஆகியோர் மட்டும் ரன்கள் சோ்க்க, மிடில் ஆர்டரில் கேப்டன் ஜாஸ் பட்லரும் தடுமாறி வருகிறார். லோயர் மிடில் ஆர்டரில் லியம் லிவிங்ஸ்டனும் குறைந்த ரன்களிலேயே விக்கெட்டை இழப்பது அணியின் ஸ்கோரை பாதிக்கிறது. பௌலிங்கில் ரீஸ் டோப்லி மட்டும் முனைப்புடன் விக்கெட்டுகள் சரித்து வருகிறாா். மார்க் வுட், ஆதில் ரஷீத் ஆகியோர் இன்னும் விக்கெட்டுகள் வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.

தென்னாப்பிரிக்க அணியை பொருத்தவரை, பேட்டிங்கில் குவின்டன் டி காக் இதுவரை இரு சதங்களுடன் நம்பிக்கை அளிப்பவராக இருக்கிறார். எய்டன் மார்க்ரம், ராஸி வான் டெர் ஆகியோரும் நல்ல ஃபார்மில் இருப்பதால் ஸ்கோர் சேர்ப்பதில் தடுமாற்றம் இருக்காது எனத் தெரிகிறது. பௌலிங்கில் ககிசோ ரபாடா, மார்கோ யான்சென் ஆகியோர் பிரதானமாக இருக்க, லுங்கி இங்கிடி அவர்களுக்குத் துணை நிற்கிறார்.

இரு அணிகளும் இதுவரை 69 ஒருநாள் ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியிருக்கும் நிலையில், தென்னாப்பிரிக்கா 33, இங்கிலாந்து 30 வெற்றிகளைப் பெற்றுள்ளன. 5 ஆட்டங்களில் முடிவு எட்டப்படாத நிலையில், 1 ஆட்டம் டை ஆகியுள்ளது. கடைசியாக இந்தியா கோப்பை வென்ற 2011 உலகக் கோப்பை கிரிக்கெட்டின் இறுதி ஆட்டம் நடைபெற்ற இந்த மைதான ஆடுகளம், பொதுவாக பௌலர்களுக்கு சாதகமானதாகும். ஓவர்கள் செல்லச் செல்ல பேட்டர்களும் ஆதிக்கம் செலுத்த இயலும். இங்கு இதுவரை 29 ஒருநாள் ஆட்டங்கள் நடைபெற்றுள்ள நிலையில், முதலில் பேட் செய்த அணிகள் 14 முறையும், சேஸிங் செய்த அணிகள் 15 முறையும் வென்றுள்ளன.

இதே போன்று,  லக்னௌ-இன் இகானா மைதானத்தில் காலை 10.30 மணிக்கு இலங்கை – நெதர்லாந்து அணிகள் இன்று சந்தித்துக் கொள்கின்றன. முதல் வெற்றிக்காக நெதா்லாந்துடன் மோதும் இலங்கை உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 19-ஆவது ஆட்டத்தில் இலங்கை – நெதர்லாந்து அணிகள் நேருக்கு நேர் சந்திக்கின்றன. இதில் இலங்கை, இன்னும் ஒரு வெற்றி கூட பெறாத நிலையில், முதல் வெற்றி முனைப்புடன் இந்த ஆட்டத்துக்கு வருகிறது. மறுபுறம் நெதா்லாந்து, நல்லதொரு ஃபாா்மில் இருந்த தென்னாப்பிரிக்காவை கடந்த ஆட்டத்தில் வென்ற உத்வேகத்துடன் இருக்கிறது. இலங்கை அணியைப் பொருத்தவரை பௌலிங்கே அந்த அணியை பின்னுக்கு இழுப்பதாக இருக்கிறது. முதலிரு ஆட்டங்களிலும் 300-க்கும் அதிகமாக ஸ்கோா் செய்தும் அந்த அணிக்கு வெற்றி வசப்படாமல் போனது. தில்ஷன் மதுஷங்கா மட்டும் சற்று முயற்சித்து விக்கெட்டுகள் சாய்த்து வருகிறார். இதர பௌலா்களும் முனைப்பு காட்டும் பட்சத்தில் அவருக்கான பணிச்சுமை குறையும்.

அந்த அணியின் பேட்டிங்கில் குசல் பெரெரா, பதும் நிசங்கா, சதீரா சமரவிக்ரமா, குசல் மெண்டிஸ் என ஒவ்வொரு ஆட்டத்திலும் ஒவ்வொருவரும் ரன்கள் சேர்த்து அணிக்கும் பலமாக இருக்கின்றனர். அதை இந்த ஆட்டத்திலும் அவா்கள் தொடருவர் என எதிா்பாா்க்கலாம். நெதர்லாந்தை பொருத்தவரை, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான வெற்றி உத்வேகம் அளித்தாலும், பேட்டிங், பௌலிங்கில் அந்த அணி தடுமாற்றமாகவே இருக்கிறது. கடந்த ஆட்டத்தில் அணிக்காக ரன்கள் சோர்த்த கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் இந்த ஆட்டத்திலும் அதைச் செய்யும் பட்சத்தில் நெதர்லாந்து பலம் பெறும். பௌலிங்கில் பால் வான் மீா்கெனுடன் இதர பௌலா்களும் சிறப்பாகச் செயல்பட்டால் இலங்கைக்கு சவால் அளிக்க வாய்ப்புள்ளது.  இந்த ஃபார்மட்டில் இலங்கை – நெதர்லாந்து அணிகள் இதுவரை 5 முறை சந்தித்திருக்க, இலங்கையே அனைத்து ஆட்டங்களிலும் வென்றிருக்கிறது. நேரம்: காலை 10.30 மணி இடம்: இகானா மைதானம், லக்னௌ

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.