2024-ம் ஆண்டில் 50 நாடுகளில் தேர்தல்!

உலகில் பாதி மக்கள் தொகை கொண்ட 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் 2024-ம் ஆண்டில் தேர்தல் நடைபெற உள்ளது.  இந்தியாவில் இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது.  இந்த தேர்தலுக்கான அறிவிப்பை பிப்ரவரி மாதம்…

உலகில் பாதி மக்கள் தொகை கொண்ட 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் 2024-ம் ஆண்டில் தேர்தல் நடைபெற உள்ளது. 

இந்தியாவில் இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது.  இந்த தேர்தலுக்கான அறிவிப்பை பிப்ரவரி மாதம் இறுதியில் அல்லது மார்ச் மாதத் தொடக்கத்தில் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிடலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் 3-வது முறையாக ஆட்சியமைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு தீவிரமாகப் பணியாற்றி வருகிறது.  அதே நேரத்தில் ஆட்சியைக் கைப்பற்றும் எண்ணத்தில் எதிர்க்கட்சிகள் ‘இந்தியா’ கூட்டணியில் ஒன்றிணைந்துள்ளன.

இந்த நிலையில்,  இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா,  தைவான்,  பிரிட்டன், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட முக்கிய நாடுகளில் அதிபர்,  நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.  மேலும் சர்வதேச அரசியல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்த அமெரிக்க அதிபர் பதவிக்கு நடைபெற இருக்கும் தேர்தல் இந்த ஆண்டின் முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ஜோ பைடனுக்கும்,  முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்க்கும் இடையே கடுமையான போட்டி இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்துக்கும் வரும் ஜூன் மாதம் தேர்தல் நடைபெற இருக்கிறது.  இதனிடையே தைவானில் கடந்த சனிக்கிழமை தேர்தல் நடைபெற்றது.

இதையும் படியுங்கள்: ஆசிய பேட்மின்டன் சாம்பியன்ஷிப் 2024 – இந்திய அணி அறிவிப்பு!

வங்கதேசத்தில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற பொதுத் தேர்தலில் வென்று,  பிரதமர் ஷேக் ஹசீனா 4-ஆவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளார்.  ராணுவக் கண்காணிப்புடன் ஆட்சி நடைபெற்று வரும்,  பாகிஸ்தானில் அடுத்த மாதம் தேர்தல் நடைபெற இருக்கிறது.

மெக்ஸிகோவில் ஜூன் மாதம் நடைபெற உள்ள தேர்தலில்,  நாட்டின் முதல் பெண் அதிபராக க்ளாடியா ஷேயின்பூமை தேர்ந்தெடுக்கப்படுவாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா தொற்று, பருவநிலை மாற்றம், ரஷ்யா-உக்ரைன் போர் ஆகியவற்றை தொடர்ந்து ஏற்பட்ட உணவுப் பற்றாக்குறை ஆகிய பாதிப்புகளில் இருந்து மீண்டு வரும் ஆப்பிரிக்கா கண்டத்தின் செனகல்,  தெற்கு சூடான் ஆகிய முக்கிய நாடுகளில் இந்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.