முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டிற்கு எடப்பாடி பழனிசாமி வீடியோ வெளியிட்டு பதில்!

அமலாக்கத்துறை சோதனை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வீடியோ வெளியிட்ட நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று வீடியோ வெளியிட்டு பதில் அளித்துள்ளார். அதில் செந்தில் பாலாஜி விவகாரத்தில் முதலமைச்சர் பதற்றப்பட காரணம்…

அமலாக்கத்துறை சோதனை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வீடியோ வெளியிட்ட நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று வீடியோ வெளியிட்டு பதில் அளித்துள்ளார். அதில் செந்தில் பாலாஜி விவகாரத்தில் முதலமைச்சர் பதற்றப்பட காரணம் என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், திமுகவினரை சீண்டிப் பார்க்க வேண்டாம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்து நேற்று வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் செந்தில் பாலாஜி கைது அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் செயல். செந்தில் பாலாஜியை தீவிரவாதியைப் போல அடைத்து வைத்து விசாரிக்க என்ன அவசியம் இருக்கிறது?. அமலாக்கத்துறை மூலம் அரசியல் செய்ய பாஜக தலைமை நினைக்கிறது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான புகாருக்கு ஆதாரங்களை தந்தால், அவர்கள் மீது ரெய்டு நடத்த தயாரா என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

மேலும் திமுக நடத்திய போராட்டங்கள் எப்படிப்பட்டது என்று வரலாற்றை புரட்டிப் பார்த்தும், டெல்லியில் இருக்கும் மூத்த தலைவர்களைக் கேட்டுப் பார்த்தும் தெரிந்து கொள்ளுங்கள். ஆட்சிக்காக மட்டும் தாங்கள் கட்சி நடத்துபவர்கள் இல்லை; கொள்கைக்காகக் கட்சி நடத்துகிறவர்கள். தேர்தல் களத்தில் எதிர் கொள்ள முடியாதவர்களை விசாரணை அமைப்புகளை வைத்து மிரட்டுவது பாஜகவின் பாணி என்று விமர்சித்த முதலமைச்சர், மிரட்டிப் பணிய வைக்க நினைத்தால், பணிய மாட்டோம். நிமிர்ந்து நின்று நேருக்கு நேர் சந்திப்போம் என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், செந்தில் பாலாஜி விவகாரத்தில் முதலமைச்சர் பதற்றப்பட காரணம் என்ன? என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வீடியோ வெளியிட்டு கேள்வி எழுப்பியுள்ளார். அதில் செந்தில்பாலாஜிக்கு ஆதரவாக பேசும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அச்சத்தில் இருக்கிறார். அமலாக்கத்துறை பலமுறை சம்மன் அனுப்பியும் செந்தில் பாலாஜி ஆஜராகவில்லை. உச்சநீதிமன்ற உத்தரவு அடிப்படையில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றுள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதுபோல் நாடகமாடுகிறார் செந்தில் பாலாஜி. 2 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் திமுகவினர் ரூ.30,000 கோடியை சுரண்டியுள்ளனர்.
3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் பார்கள் முறைகேடாக இயங்குகின்றன. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் ஊழல் தான் வளர்ச்சி பெற்றுள்ளது. செந்தில் பாலாஜி வழக்கில் நீதிமன்றத்தை நாடி குற்றமற்றவர் என நிரூபிக்கட்டும். செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையிடம் ஏதாவது சொல்லிவிட்டால் தனக்கு பாதிப்பு வந்துவிடுமோ என அஞ்சுகிறார் முதலமைச்சர் . முந்தைய ரெய்டுகளின்போது மு.க.ஸ்டாலின் மௌனம் காத்தது ஏன்?

நெடுஞ்சாலைத்துறையில் ஊழல் செய்ததாக என் மீது வழக்கு தொடுத்தார் ஆர்.எஸ்.பாரதி. என் மீதான வழக்குகளை துணிச்சலோடு எதிர்கொண்டு வருகிறேன். செந்தில் பாலாஜி விவகாரத்தில் அ.தி.மு.க.வையும் என்னையும் முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். எங்களுக்கு பதவி முக்கியமல்ல, தமிழ்நாட்டு மக்களுடைய எண்ணங்களை நிறைவேற்றுவது தான் அதிமுகவின் லட்சியம். அதிமுகவை யார் அழிக்க நினைத்தாலும் அவர்கள் அழிந்து போவார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வீடியோ வெளியிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார்.

https://twitter.com/AIADMKOfficial/status/1669578028484100097?s=20

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.