அரசியலமைப்பிற்கு எதிராக ஆளுநர் செயல்படுகிறார் -சபாநாயகர் அப்பாவு!

இந்திய அரசியலமைப்பிற்கு எதிராக ஆளுநர் செயல்படுகிறார் என  சபாநாயகர் அப்பாவு குற்றம்சாட்டியுள்ளார்.  தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநர் ரவிக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வருகிறது. இதன் விளைவாகத் தமிழ்நாடு அரசு எடுக்கும் தீர்மானங்களுக்கு…

இந்திய அரசியலமைப்பிற்கு எதிராக ஆளுநர் செயல்படுகிறார் என  சபாநாயகர் அப்பாவு குற்றம்சாட்டியுள்ளார். 
தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநர் ரவிக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வருகிறது. இதன் விளைவாகத் தமிழ்நாடு அரசு எடுக்கும் தீர்மானங்களுக்கு முட்டுக்கட்டை போடும் விதமாக ஆளுநர் செயல்படுவதாக திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன.
அத்துடன் தமிழ்நாடு அரசின் ஆட்சி அதிகாரத்திலும் ஆளுநர் ஆர்.என்.ரவி தலையிடுவதாகவும் புகார் தொடர்ந்து எழுந்து வருகிறது. இந்தநிலையில் அமைச்சர் செந்தில்பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநருக்குக் கடிதம் அனுப்பினார்.
ஆனால் முதலமைச்சரின் பரிந்துரையை ஆளுநர் ஏற்றுக் கொள்ளாமல் திருப்பி அனுப்பியுள்ளார். இதனால் தமிழ்நாடு அரசியலில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

 

இந்நிலையில், ராதாபுரம் கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட்டபின் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியதாவது:

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி தனது அமைச்சரவைக்கு யார் யாருக்கு என்ன துறை ஒதுக்க வேண்டும் என முடிவெடுக்கும் அதிகாரம் முதலமைச்சருக்கு தான் உள்ளது. முதலமைச்சர் எழுதிய கடிதத்தை ஆளுநர் திருப்பி அனுப்பியது வேதனையாக உள்ளது. அதை தவிர்த்திருக்க வேண்டும்.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல் நிலை சரியில்லை. வழக்கு நிலுவையில் இருக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி நீதிமன்ற காவல் வழக்கு நிலுவையிலிருந்தால் அமைச்சர் பதவியில் இருக்க கூடாது என்று எந்த சட்டத்திலும் இல்லை. தண்டனை பெற்றால் மட்டும் தான் பதவியில் இருக்கக்கூடாது. தொடர்ந்து ஆளுநர் இந்திய அரசியல் சட்டத்திற்கு விரோதமாகச் செயல்பட்டு வருகிறார். மதச்சார்பற்ற நாட்டை அவர் மதச்சார்புள்ள நாடாக மாற்ற முயற்சிக்கிறார்.

இவ்வாறு சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.