தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அரசியல் காலம் சூடு பிடித்துள்ளது. அதிமுக கூட்டணியில் தற்போது, பாஜக, பாமக (அன்புமணி), தமாகா, அமமுக ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இந்த நிலையில் அதிமுக – பாஜக இடையிலான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதற்கிடையே, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தொகுதி பங்கீடு குறித்து இருவரும் பேசியுள்ளனர்.
அதிமுகவிடம் இருந்து பாஜக 30 தொகுதிகளும், அமமுகவுக்கு 8 தொகுதிகளும், சிறு கட்சிகளுக்கு 12 தொகுதிகளும் என மொத்தம் 50 சீட்கள் கேட்பதாக சொல்லப்படுகிறது. இதனால் அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதி வடிவம் பெறுவதில் இழுபறி நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.







