தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அரசியல் காலம் சூடு பிடித்துள்ளது. அதிமுக கூட்டணியில் தற்போது, பாஜக, பாமக (அன்புமணி), தமாகா, அமமுக ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இதற்கிடையே அதிமுக – பாஜக இடையிலான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதற்கிடையே, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தொகுதி பங்கீடு குறித்து இருவரும் பேசியுள்ளனர்.
இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது பேசியவர், “மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்து நேற்று இரவு ஆலோசனை நடத்தினேன். மத்திய அமைச்சருக்கு பல்வேறு வேலைகள் இருப்பதன் காரணமாகவும் பல மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் காரணமாகவும் இங்கு நேரில் சந்தித்திருக்கிறோம்.
இன்னும் ஓரிரு நாட்களில் அனைத்து தொகுதிகளும் இறுதி செய்யப்படும். நான்கு நாட்களில் தொகுதி பங்கீடு உடன்பாடு அனைத்தும் முடிந்து விடும். கூட்டத்தில் எந்த ஒரு குழப்பமும் கிடையாது. எந்த சிக்கலும் கிடையாது. யார் யாருக்கு வெற்றி வாய்ப்பு எந்தந்த தொகுதியில் இருக்கிறதோ அதனை ஆராய்ந்து நாங்கள் அனைத்தையும் உறுதி செய்வோம். மத்திய அமைச்சர் அமித் ஷாவிற்கு வேலை பளு காரணமாக நான் டெல்லி வருகிறேன்.
எங்கள் வெற்றியை டெல்லியில் இருக்கும் நீங்கள் தான் கேட்டு சொல்லனும். விஜய் உடன் நாங்கள் பேசவில்லை. பாஜகவும் பேசவில்லை, ஒரு வாரத்தில் தேர்தல் வாக்குறுதி வெளியிடப்படும். கூட்டணி கட்சிகள் ஏற்கனவே அனைத்தும் உறுதியாக கேட்டதால் தற்போது தேர்தலை நோக்கி பயணிக்கிறோம். யார் யாருக்கு எங்கு வெற்றி வாய்ப்புகள் இருக்கிறதோ அங்கு வாய்ப்பு அளிக்கப்படும்.
ஐந்தாண்டு காலத்தை திமுக சார்பில் எந்த திட்டங்களும் செயல்படுத்தவில்லை. மாறாக கொலை, கொள்ளை தினம்தோறும் செய்திகளாக வந்து கொண்டிருக்கிறது, இதுவே திமுகவின் சாதனையாகும். ஒரு வாரத்தில் அதிமுக கூட்டணி தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.







