குடிபோதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவர் ஊழியர்களால் அடித்துக் கொலை; சிகிச்சை மையத்திற்கு சீல் வைப்பு!

வேதாரண்யம் அருகே குடிபோதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்தவா்  ஊழியர்களால் அடித்து கொலை செய்யப்பட்டதையடுத்து, போலீசாா்  மறுவாழ்வு மையத்திற்கு சீல் வைத்தனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் மேலவீதியில் கடந்த 6 ஆண்டுகளாக தனியாருக்கு…

வேதாரண்யம் அருகே குடிபோதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்தவா்  ஊழியர்களால் அடித்து கொலை செய்யப்பட்டதையடுத்து, போலீசாா்  மறுவாழ்வு மையத்திற்கு சீல் வைத்தனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் மேலவீதியில் கடந்த 6 ஆண்டுகளாக தனியாருக்கு சொந்தமான பிரியம் குடிபோதை மறுவாழ்வு சிகிச்சை மையம் இயங்கி வருகிறது. கடந்த ஜந்து ஆண்டுகளாக எந்தவித அனுமதியும் இல்லாமல் இந்த மையம் செயல்பட்டு வந்த நிலையில் தற்போது 2023 ஆம் ஆண்டு முதல் 2029 ஆம் ஆண்டு வரை இயங்குவதற்கு அரசு அனுமதி பெற்று இருந்தனர். இந்த மையத்தில் தற்போது 30 பேர் குடிபோதை மறப்பதற்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் திருத்துறைப்பூண்டி தாலுக்கா கரையங்காடு கிராமத்தை சேர்ந்த
முருகேசன் (வயது 47) சிகிச்சை பெற்று வருகிறார். இவர் மறுவாழ்வு மையத்தில் பூட்டை உடைத்து தப்பிக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. பூட்டை உடைக்க முயற்சி செய்த முருகேசனை மறுவாழ்வு மையத்தின் மேலாளர் வேல்முருகன், பணியாளர்கள் ஷியாம்சுந்தர், தீபக்குமார் ஆகிய மூன்று பேரும் அங்கு உள்ள தூணில் கட்டி வைத்து சரமாரியாக இரும்பு பைபால் தாக்கியுள்ளனர்.

இதில் படுகாயம் அடைந்த முருகேசன் மயங்கி விழுந்துள்ளார் அவரை வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று, இவர் கழிவறையில் வழுக்கி
விழுந்து விட்டார் என்று மருத்துவரிடம் கூறியுள்ளனர். மருத்துவர் பரிசோதனை
செய்து அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என கூறினார். பின்னா் தகவல் அறிந்து வந்த முருகேசன் மனைவி தமிழ்ச்செல்வி தனது கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக வேதாரண்யம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், போலீசார் விசாரணையில் இறங்கினர்.

உடனடியாக போலீசார் போதை மறுவாழ்வு மையத்திற்கு நேரில் சென்று அங்கு தங்கிருப்பவரிடம் விசாரணை செய்ததில் திடுக்கிடும் தகவல் வெளியானது. நான்கு பேர் தப்பிக்க முயற்சி செய்வதாக கூறி நான்கு பேரை காலை 6மணி முதல் 9 மணி வரை மூன்று மணி நேரம் தூணில் கட்டி வைத்து இரும்பு கம்பியால் கடுமையாக தாக்கியதாகவும், அப்போது முருகேசன் மயங்கி விழுந்ததால்  மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் என்றும் மற்ற 3 பேர் உடல் முழுவதும் பலத்த காயத்துடன் படுக்க வைத்திருப்பதும் தெரியவந்தது.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஹர்ஷ்சிங், அடிக்கப்பட்டு பலத்த காயத்துடன் படுத்திருந்தவர்களிடம் விசாரணை செய்தார். பின்பு உடனடியாக அந்த மூன்று நபர்களையும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்க கூறினார். இந்த நிலையில் நடக்க முடியாமல் இருந்த சரண்ராஜ், பாலமுருகன் பிரபகாரன் ஆகியோர் தூக்கிச் சென்று வாகனத்தில் ஏற்றி வேதாரண்யம் அரசு மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பின்பு உளவியல் டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு உள்ளவர்களை பரிசோதனை செய்தனர்.பின்பு மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் அந்த மையத்தில் இருந்த 30 நபர்களையும் மாற்று இடத்திற்கு மாற்றப்பட்டனர்.

இதனையடுத்து, வேதாரண்யம் கோட்டாட்சியர், வருவாய் துறையினர் மற்றும் போலீசார், மையத்தை பூட்டி சீல் வைத்தனர். பின்னா் மறுவாழ்வு மையத்தில் உள்ளவர்கள் குடும்பத்தினருக்கு தகவல் அளிக்கப்பட்டு  வீட்டிற்கு அனுப்பப்பட உள்ளனர். இந்த நிலையில் முருகேசனை அடித்து கொலை செய்ததாக உரிமையாளர் மணிகண்டன், மேலாளர் வேல்முருகன், பணியாளர்கள் ஷாம்சுந்தர் , தீபக்குமார் ஆகிய நான்கு பேர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் ஒரு மாதத்திற்கு 15ஆயிரம் ரூபாய் கட்டணமாக பணத்தைப் பெற்றுக் கொண்டு உரிய முறையில் சிகிச்சை அளிக்காமல் அடித்து மரண பயத்தை ஏற்படுத்தி துன்புறுத்தி மனிதாபிமானம் அற்ற முறையில் நடந்த இந்த கொலைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.