காவலர்களின் பாதுகாப்பையும் பறிக்கும் போதைப் புழக்கம் – அண்ணாமலை…!

போதைப் புழக்கமானது காவலர்களின் பாதுகாப்பையும் பறித்துள்ளதாக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

”திருப்பூர் மாவட்டம் அருள்மிகு வீரராகவப் பெருமாள் திருக்கோயிலில் காவலரை மதுபோதையில் இருந்த நபர் கத்தியால் தாக்க முயற்சிக்கும் காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 திமுக அரசின் திறனற்ற நிர்வாகத்தால் தெருதோறும் டாஸ்மாக் கடைகள் அமைக்கப்பட்டு, குற்றங்களைப் பல்கிப் பெருகவிட்டு மக்களுக்குத் துளியும் பாதுகாப்பில்லாத நிலை நிலவி வருகிறது. ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, மனிதனைக் கடித்த கதையாகத் தற்போது மக்களைப் பாதுகாக்க வேண்டிய காவலர்களுக்கும் பாதுகாப்பில்லாத அளவிற்கு சட்டம் ஒழுங்கைச் சீரழித்துள்ளது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அவர்களின் துருப்பிடித்த இரும்புக்கரம்.

போதையில் தள்ளாடவிட்டு, பேரழிவில் தமிழகத்தை நிறுத்திவிட்டு, போதையில்லாத் தமிழகம் எனப் போலியாக மார்தட்டிக் கொள்ளும் திமுக அரசின் மமதைக்கு மக்கள் விரைவில் முற்றுப்புள்ளி வைப்பர் தமிழகத்தை மீட்பர்”

என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.