போதைப்பொருள் கடத்தல் வழக்கு – சிங்கப்பூர் வாழ் தமிழருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்!

போதைப்பொருள் கடத்திய வழக்கில், சிங்கப்பூர் வாழ் தமிழரான தங்கராஜ் என்பவர் நேற்று தூக்கிலிடப்பட்டார். இவர் கடத்தல் வழக்கில் கைதாகி 9 ஆண்டுகளாக சிறையில் இருந்த நிலையில், இந்த தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்திய வம்சாவளியைச்…

போதைப்பொருள் கடத்திய வழக்கில், சிங்கப்பூர் வாழ் தமிழரான தங்கராஜ் என்பவர் நேற்று தூக்கிலிடப்பட்டார். இவர் கடத்தல் வழக்கில் கைதாகி 9 ஆண்டுகளாக சிறையில் இருந்த நிலையில், இந்த தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவரான தங்கராஜூ சுப்பையா மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு 1 கிலோ கஞ்சா கடத்தப்படுவதற்கு உதவியதாக கடந்த 2014-ல் கைது செய்யப்பட்டாா். இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, கடந்த 2018-ம் ஆண்டு அந்நாட்டு நீதிமன்றம் குற்றவாளி என தீர்ப்பளித்ததோடு,அவருக்கு தூக்கு தண்டனையும் வழங்கியது. இது தொடர்பான மேல் முறையீட்டு வழக்கிலும் அவரது தண்டனை உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், தங்கராஜுவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என சிங்கப்பூரில் உள்ள ஐ.நா. மனித உரிமை அலுவலகம் வலியுறுத்தியது. இதே போன்று பிரிட்டன் தொழிலதிபரும் மனித உரிமை ஆர்வலருமான ரிச்சர்டு பிரான்சன், தனது வலைப்பூவில், “தங்கராஜு கைது செய்யப்பட்டபோது அவரிடமிருந்து கஞ்சா பிடிபடவில்லை. அப்பாவியான அவருக்கு மரண தண்டனையை நிறைவேற்றக்கூடாது” என வலியுறுத்தினார். ஆனால் கடத்தல் வழக்கில் கைதாகி 9 ஆண்டுகளாக சிறையில் இருந்த நிலையில், சர்வதேச சமூகத்தின் எதிர்ப்பையும் மீறி தங்கராஜு நேற்று தூக்கிலிடப்பட்டார்.

போதைப் பொருள் தடுப்புக்கான சட்டங்கள் சிங்கப்பூரில் கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. போதைப் பொருள் வைத்திருக்கும் குற்றத்துக்கு சிங்கப்பூரில் கட்டாய மரண தண்டனை வழங்கப்படுகிறது. இந்த குற்றங்களுக்காக கடந்த ஆண்டில் மட்டும் 11 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. போதைப் பொருள் குற்றத்துக்காக அந்நாட்டில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில், தூக்கு தண்டனை நிறை வேற்றப்பட்ட நிலையில், தற்போது 6 மாத இடைவெளிக்குப் பிறகு, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தங்கராஜுவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.