இரட்டை இலை சின்னம், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இரு தரப்பினருக்குமே கிடைக்காது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழக அலுவலகத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் குறித்து கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் ஆலோசனைக் கூட்டமானது நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளராக உள்ள சிவபிரசாத், அமமுக வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், ஈரோடு கிழக்குத் தொகுதியில் அமமுக சார்பில் அக்கட்சியின் கிழக்கு மாநகர மாவட்டச் செயலாளர் சிவபிரசாந்த் போட்டியிடுவார் என அறிவித்தார். மேலும் வருகின்ற 3 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.
இடைத்தேர்தலுக்கு அமமுக துணை பொதுச்செயலாளர் சண்முகவேல் தலைமையில் 294 பேர் கொண்ட அமமுக தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தேர்தல் கூட்டணி குறித்து சில கட்சிகளுடன் பேச்சு நடத்தி வருவதாக கூறிய டிடிவி தினகரன், இடைத்தேர்தல் முடிவு திமுகவுக்கு பாடம் புகட்டும் வகையில் அமையும் என்றார். ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகிய இரு தரப்பினருக்குமே இரட்டை இலைச் சின்னம் கிடைக்காது என்றும் அவர் தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமமுக வேட்பாளர் சிவபிரசாத், எதிரில் நிற்கும் வேட்பாளரை பார்த்து பயந்து தேர்தலில் நிற்கவில்லை என்றும், கட்சியின் தலைவர், தொண்டர்கள், மக்கள் மற்றும் தன்னுடைய திறமையின் மீது கொண்டுள்ள நம்பிக்கையின் காரணமாகவே இந்த தேர்தலில் நிற்பதாகவும் தெரிவித்தார்.