அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரண்டு பதவிகள் இருந்து வந்த நிலையில் அதனை நிர்வகித்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கட்சிக்குள் பிளவு ஏற்பட்டது. இதனை அடுத்து அதிமுகவின் பொதுக்குழு கூடி அதில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார் இதற்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நிறைவடைந்து தீர்ப்பானது தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா மறைவையடுத்து அத்தொகுதிக்கு இடைத்தேர்தலானது அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக, எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் அ.தி்மு.க வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனை நடைபெற்று வரும் நிலையில் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அதிமுக பொதுக்குழு விவகாரத்தை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வு முன்பு, எடப்பாடி பழனிச்சாமி தரப்பு சார்பாக மூத்த வழக்கறிஞர் அரியமா சுந்தரம் ஆஜராகி கோரிக்கைகளை முறையீடாக முன்வைத்தார்.
குறிப்பாக பொதுக்குழு வழக்கின் விசாரணையை முடிந்து தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தங்கள் தரப்பு வேட்பாளரை நிறுத்த விரும்புவதாகவும், ஆனால் பொதுக்குழு வழக்கு தீர்ப்பு உச்சநீதிமன்றத்தின் அளிக்கப்படாமல் இருப்பதை சுட்டிக்காட்டி தனது கையொப்பமிட்ட வேட்பாளரை தேர்தல் ஆணையம் ஏற்க மறுக்கிறது. எனவே இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு சில அறிவுறுத்தல்களை கொடுக்க வேண்டும் குறிப்பாக அதிமுக.வின் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட இடைக்கால பொதுச்செயலாளரான தன்னை அங்கீகரிக்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
அப்போது, நீதிபதிகள் தேர்தல் எப்போது வேட்பு மனு தாக்கல் செய்யகடைசி நாள் என்ன? உள்ளிட்ட விவரங்களை கேட்டு அறிந்ததோடு, இந்த விவகாரம் தொடர்பாக முறையிடுவதற்கான விண்ணப்பங்களை சரியாக தாக்கல் செய்து பின்னர் திங்கட்கிழமை முறையிடுமாறு தெரிவித்தனர்.
மேலும், வேட்புமனு தாக்கல் செய்யும் கடைசி நாளுக்கு முன்பாக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வழங்க முடியுமா என்பதை பார்க்கிறோம் , ஒருவேளை அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பு தாமதமாகும்பட்சத்தில் ஈ.பி.எஸ் தரப்பின் புதிய கோரிக்கை தொடர்பாக பரிசீலிப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.







