தமிழ்நாட்டில் நேற்று 1,556 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் ஒட்டுமொத்த பாதிப்பு 26,24,234 ஆக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தடுப்பூசி செலுத்தும் பணிகளை மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
இதன் தொடர்ச்சியாக தற்போது மதுரையில் வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் பணிகளை மாநகராட்சி தொடங்கியுள்ளது. இது குறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
மதுரை மாவட்டத்தில் இதுவரை 9,88,508 பேருக்கு முதல் தவணையும் 2,68,340 பேருக்கு இரண்டு தவணையும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. முதல் தவணை 40 சதவீதம் பேரும் 2 தவணை 10 சதவீதம் பேரும் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். மாநகராட்சி பகுதியில் 80 நிரந்தர முகாம்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று முதல் வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் 18 வயது முதல் அனைத்து வயதுடையவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ள நிலையில் வார்டு வாரியாக சென்று தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
முதல் கட்டமாக 4 செவிலியர்கள் கொண்ட 5 குழுக்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. நாள்தோறும் 1,000 பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் விவரங்களை சேகரித்து அதன் அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. முதல் தவணையை முகாமில் செலுத்தி கொண்டவர்கள் 2வது தவணை இங்கு செலுத்தி கொள்ளலாம் என மாநகராட்சி தரப்பில் தெரிவித்துள்ளது.








