“2022 ஜனவரியில் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி” – முதலமைச்சர்

இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி 1.1.2022 முதல் வழங்கப்படும் என 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “அரசு ஊழியர்களின் உற்ற…

இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி 1.1.2022 முதல் வழங்கப்படும் என 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “அரசு ஊழியர்களின் உற்ற நண்பனாக இருக்கிறது திமுக அரசு. அண்ணா, கருணாநிதி தலைமையில் அரசு ஊழியர்களுக்கான நலத்திட்டங்கள் எண்ணற்றவை. அதன் தொடர்ச்சியாக தற்போது அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள் வைத்த கோரிக்கை பரிசீலிக்கப்பட்டன. அதன்படி அரசு ஊழியர்கள் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி 1.1.2022 முதல் வழங்கப்படும். கடும் நெருக்கடியான சூழல் இருப்பினும் 1.1.2022 முதல் அகவிலைப்படி அமல்படுத்தப்படும்.” என தெரிவித்துள்ளார். முன்னதாக 2022 ஏப்ரலில் அகவிலைப்படி அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது 2022 ஜனவரி முதல் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர், “சத்துணவு சமையல் ஊழியர்கள் ஒய்வு பெறும் வயது 58 முதல் 60 வயதாக உயர்த்தப்படும். அரசு பணியாளர்களுக்கு கூடுதல் கல்வி தகுதிக்கான ஊக்கத்தொகை விரைவில் அறிவிக்கப்படும். அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். ஒய்வு பெறும் நாளில் அரசு பணியாளர்கள் தற்காலிக பணி நீக்கத்தில் வைக்கும் நடைமுறை தவிர்க்கப்படும். வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட காலம், பணி நாட்களாக கருதப்படும். பணியிடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மீண்டும் அதே இடத்தில் பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். போராட்ட காலத்தில் எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படும். இந்த நடவடிக்கை காரணமாக பதவி உயர்வு பாதிக்கப்பட்டிருந்தால் அது சரி செய்யப்படும்.” என்றும் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

மேலும், “கணக்கு, கருவூலத்துறையின் பணிகளை எளிதாக்க மாவட்டந்தோறும் பயிற்சி வழங்கப்படும். புதிய அரசு பணியாளர்களுக்கு பணி தொடர்பான பயிற்சியை அந்தந்த மாவட்டங்களிலேயே வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாணவர் விகிதாச்சாரத்திற்கேற்ப ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும். ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.” என்று தனது அறிவிப்பில் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.