தமிழ்நாடு ஆளுநர் இரண்டாம் தர, மூன்றாம் தர அரசியல்வாதிகளை போன்று அரசியல் செய்ய வேண்டாம் என சபாநாயகர் அப்பாவு கேட்டுக் கொண்டுள்ளார்.
கோவை மாவட்டம், சூலூரில் வர்த்தகர் சங்கம் சார்பில் இரண்டாம் ஆண்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதனையடுத்து பேசிய சபாநாயகர் அப்பாவு, கோவை மாவட்ட சங்க மாநாட்டிற்கு வருகை தந்தது மகிழ்ச்சியாக உள்ளது. 10 சதவீதம் மின் கட்டண சலுகை வழங்கியதும் இந்த அரசு தான். வணிகர்களுக்கு ஒரு லட்சம் ரூபாயாக இருந்த இழப்பீட்டுத் தொகையை மூன்று லட்சம் ரூபாயாக உயர்த்தியதும் திமுக அரசு தான்.
ஆளுநர்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி பணியாற்ற வேண்டியவர்கள். ஆனால் அவர்கள் அதிலிருந்து தவறாமல் பணியாற்றினால் நன்றாக இருக்கும். இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு. அப்படிப்பட்ட நாட்டில் சட்டத்தின் ஆட்சி தான் நடைபெறுகிறது. மதசார்பற்ற நாடு என்பதை, மதசார்புள்ள நாடு என்பது போல் ஆளுநர்கள் பேசுவதும், அரசியல் கட்சி தலைவர்கள் போல் ஆளுங்கட்சிக்கு எதிராக தொடர்ந்து கருத்துக்களை பரப்பி வருவதும், திராவிட மாடல் அழிந்துவிட்டது என்பது போல செல்வதும் சரியாக இல்லை.
இந்தியாவில் மக்களாட்சி தத்துவம் தான் சிறந்தது. அரசியலமைப்புச் சட்டம் தான் சிறந்தது. மக்களாட்சி சட்டம் தான் நடைபெறுகிறது. இதனைத் தெரிந்து சொல்கிறார்களா தெரியாமல் ஆளுங்கள் சொல்கிறார்களா என்று தெரியவில்லை.
கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுத்தது. இது தொடர்பாக உள்துறை மற்றும் பிரதமர், குடியரசு தலைவர்களை சந்தித்து புகார் தெரிவிக்காமல் நான்காம் தர அரசியலை ஆளுநர் செய்கிறார்.
சட்டத்துக்கு புறம்பாக பேசுவதை தவிர்த்து, நான்காம் தர, மூன்றாம் தர அரசியல் செய்ய வேண்டாம் என ஆளுநருக்கு வேண்டுகோள் விடுத்தார்.
இந்தியாவில் ஓபிசிக்கு கொடுக்கக்கூடிய மருத்துவ படிப்பில், இட ஒதுக்கிட்டை பெற்றுத் தந்தது திராவிட அரசுதான். தமிழ்நாட்டில் மட்டும் இருந்த திராவிட மாடல் இந்தியா முழுவதும் சென்று உள்ளது என்றும் சபாநாயகர் அப்பாவு கூறினார்.
- பி.ஜேம்ஸ் லிசா








